நீங்களெல்லாம் சின்னாம்மாவை வரவேற்றபோது கண்கலங்கினேன்.. டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு உருக்கமான மடல்.

By Ezhilarasan BabuFirst Published Feb 11, 2021, 10:55 AM IST
Highlights

உலக வரலாற்றில் எதனோடும் ஒப்பிட முடியாத பாசத்தை உங்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்டபோது என்னையும் அறியாமல் கண் கலங்கிதான் போயின. 

நமது தியாகத் தலைவிக்கான வரவேற்ப்பை தமிழகத்தின்  பெருவிழாவாக மாற்றியவர்கள் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை தொண்டர்கள், வரும் காலத்திலும் இதே உணர்வோடு ஒற்றுமையாக நின்று தீயசக்தி திமுகவை வீழ்த்துவதிலேயே முழு கவனமும் இருக்க வேண்டும் என அமமுக  பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்;

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை தொண்டர்களாகவும், கழக உடன்பிறப்புகளாகவும் இந்திய அரசியல் வரலாறு இதுவரை காணாத வரவேற்பு நம்முடைய தியாகத் தலைவி சின்னம்மா அவர்களுக்கு வழங்கிய நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக ஊருக்கு போய் சேர்ந்த நிம்மதியோடும் மன நிறைவோடும் இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன். 

பிப்ரவரி 8ஆம் தேதி முதலே பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவிந்த படியே இருக்கின்றன, வழிநெடுக தொடர்ந்து எவ்வளவு நேரம் ஓரிடத்தில் கூட உற்சாகம் குறையாத  உணர்வுபூர்வமான இது போன்ற வரவேற்ப்பை வரலாறு பார்த்ததே இல்லை, ஆளும் தரப்பிலிருந்து அத்தனை முனைகளிலும் கொடுக்கப்பட்ட அழுத்தங்களையும், போடப்பட்ட தடைகளையும் மீறி இந்த வரலாற்று சாதனை எவ்வாறு நிகழ்ந்தது? லட்சக்கணக்கானோர் திரண்டு சிறு வன்முறை கூட இல்லாமல் ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்ததெல்லாம் எப்படி சாத்தியம்? கூட்டம் கூடுவதே தொண்டர்களை தூண்டிவிட்டு வன்முறையை நிகழ்த்தி பொதுச் சொத்துக்களைச் சூறையாடி, மக்களை அச்சுறுத்தி, பலத்தையும் காண்பிக்கத்தான் என்று நினைக்கும் சில தலைவர்களுக்கு மத்தியில் நீங்கள் மட்டும் எப்படி இந்த மாயாஜாலத்தை நிகழ்த்தினீர்கள் என்றெல்லாம் மாற்று முகாம்களில் இருப்பவர்கள், ஊடகத்துறையினர், உயர் அதிகாரிகள் என பலரும் வியப்பில் விழிகள் விரிய கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். 

அத்தனைக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை தொண்டர்களாக நீங்கள்தான் காரணம் என்பதையும் இந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்களைத் தான் சேர வேண்டும் என்பதையும் அவர்களுக்கு பதிலாக கூறி வருகிறேன். ஆமாம் திருவிழாக்கோலம் பூண்டு நம் அன்னையை வரவேற்போம் என்ற அன்பு வேண்டுகோளை அட்சரம் பிசகாமல் மெய்ப்பித்து வெறும் திருவிழா அல்ல தமிழகத்தின் பெருவிழா என்று நடத்திக் காண்பித்தவர்கள் நீங்கள் தானே, ஆறேழு மணி நேரத்தில் பயணித்து வர வேண்டிய தூரத்தை கடப்பதற்கு ஒரு நாள் முழுக்க ஆகிவிடும் என்று யாருமே எதிர் பார்க்காத நிலையில் மணிக்கணக்கில் காத்திருந்த சோர்வு எந்த இடத்திலும் உங்கள் முகத்தில் கொஞ்சமும் இல்லையே, 

அதிலும் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் திரண்டு வந்து, பழங்காலத்தில் படைகள் முகாம் இடுவது போல முதல் நாளில் இருந்து தங்கி டீக்கடைகள் கூட இல்லாத இடங்களில் கட்டுச் சோற்றை சாப்பிட்டும், சாலையோரங்களில் அடுப்பு மூட்டி உப்புமா கிச்சடி செய்து பசியாறிவிட்டு இரண்டு நாட்களாக காத்திருந்த தங்களின்  உண்மையான அன்பினை வழிநெடுக பார்த்தபோது மெய்சிலிர்த்துப் போனேன்.  உலக வரலாற்றில் எதனோடும் ஒப்பிட முடியாத பாசத்தை உங்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்டபோது என்னையும் அறியாமல் கண் கலங்கி தான் போயின. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!