கேவலம் 17கோடி ரூபாயெல்லாம் அம்மாவுக்கு ஒரு விஷயமா?: பொங்கும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள்...

By sathish kFirst Published Jan 25, 2019, 10:53 PM IST
Highlights

போயஸ் வீடே கோயில்! அம்மாவே தெய்வம்!’ என்பதுதான் ஜெயலலிதா வாழ்ந்த வரை அ.தி.மு.க.வில் இருந்த நிலை. அதேபோல் தமிழகத்தை தலை குனிந்து ஏளனமாக பார்த்துப் பழகிய டெல்லி அரசியல் லாபிகள், தலை நிமிர்ந்து பிரமிப்பாக பார்த்த இடமும் போயஸ் தோட்டத்திலிருக்கும் எனும் ஜெயலலிதாவின் வீடுதான். 
 

இப்படி அ.தி.மு.க.வுக்கும், தேசத்தை ஆளும் டெல்லி அதிகார மையத்துக்கும் ‘ஈஸீலி நாட் ரீச்சபிள்’ தொலைவில் இருந்த ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ வருமான வரித்துறையால் முடக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்ல ஜதராபாத் வீடு, அண்ணா சாலையில் பார்சன் காம்ப்ளக்ஸின் தரை தளம் போன்றவையும் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தரப்பில் இருந்து தகவல் வந்திருக்கிறது. 

அதிலும் மேற்கண்ட சொத்துக்கள் 2007-ம் ஆண்டிலும், சென்னை செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள சொத்து 2003-லேயே முடக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. 

வாழும் தெய்வமாக தாங்கள் வணங்கி வந்த ஜெயலலிதா உண்மையிலேயே தெய்வமாகிவிட்ட நிலையில், போயஸ் தோட்ட வீடு உள்ளிட்ட அவரது முக்கிய சொத்துக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வருமான வரித்துறையால் முடக்கப்பட்டிருக்கிறது என்பதை இப்போது அவரது பெயரைச் சொல்லி ஆளும் நபர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்களோ தெரியவில்லை. 

ஆனால் இப்போதும் அதிகாரத்தில் இருக்கின்ற, இல்லாமல் இருக்கின்ற ஆனால் ஜெயலலிதா மீது உண்மையான பாசம் வைத்திருக்கும் அ.தி.மு.க. புள்ளிகளால் இந்த தகவலை ஜீரணிக்கவே முடியவில்லை. 

”2007-லேயே போயஸ் வீடு உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன என்றால் அது தெரிந்துமா அம்மா அவர்கள் சும்மா இருந்தார்கள்? அம்மாவுக்கு இந்த முடக்க விபரம் தெரியுமா தெரியாதா? அம்மாவின் சொத்துக்கள் அத்தனையையும் ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந்த சசி கோஷ்டி இதை அம்மாவின் காதுகளுக்கு கொண்டு சென்றதா இல்லையா?

வேதா நிலையம் என்பது அம்மாவுக்கு, அவரது அம்மாவின் மடி போன்றது. அந்த சொத்தானது அவர் ஆட்சியில் இல்லாத காலத்தில் முடக்கப்பட்டுள்ளது. அதன் பின் அவர் இரண்டு முறை ஆட்சி அமைத்தும் கூட மீட்கப்படவில்லை என்றால், அம்மாவின் கவனத்துக்கு இந்த விபரங்கள் வராமல் தடுக்கப்பட்டு இருந்தனவா?

இன்று ‘அம்மா வழியில் ஆட்சி’ என்று சொல்வோர் ஒரு காலத்தில் சசிகலாவின் கைப்பிள்ளைகளாக இருந்தவர்கள்தானே! சசி வழியே இவர்களுக்கும் இந்த முடக்க பிரச்னை தெரிந்திருக்கும். ஆனாலும் சசி மிரட்டியோ எதனாலோ வாய் திறக்காமலே இருந்திருக்கிறார்கள். இது அம்மாவுக்கு இவர்கள் செய்த துரோகம். 

அட அம்மாவும் இறந்து, சசியும் சிறை சென்று, இன்று எம்.ஜி.ஆர். போலவும், ஜெயலலிதா போலவும் ஒவ்வொரு மினிஸ்டரும் தன்னை நினைத்துக் கொண்டுதான் ஆட்சி நடக்கிறது. இப்போதாவது அந்த முடக்க பிரச்னையை கையிலெடுத்து தீர்த்துவிட்டு அதன் பிறகு போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கலாம் அல்லவா? அதுவும் இல்லை. 

அதுவும் கூடத்தான் வேண்டாம், இப்போது  இந்த முடக்க அறிவிப்புதான் வெளியாகிவிட்டதே இப்போதாவது இதைப் பற்றி ரியாக்ட் செய்வார்களா? என்றால் அதுவும் இல்லை. அம்மாவிடம் இவர்கள் காட்டிய பயம், மரியாதை, அன்பு, அடக்கம் எல்லாமே பொய், மாயை. ஓலைக்குடிசைக்கும், ஒருவேளை உணவுக்கும் வழியற்று கிடந்தவர்களை அரசு சலுகைகளிலும், பல கோடி சம்பாத்தியங்களிலும் குளிக்க வைத்த தெய்வம்தான் அம்மா. ஆனால் அவருடைய சொந்த வீட்டை கூட காக்கும் நன்றிக்கடன் இவர்களுக்கு இல்லை. 

இதையெல்லாம் வெளிப்படையாக  பேசும் துணிவும் எங்களுக்கு இல்லை கேவலம். பேசினால் எந்த புண்ணியமும் இருக்காது. 
ஏதோ ரூபாய் 16.75 கோடி செலுத்தாமல் வரி பாக்கி வைத்ததால் இந்த முடக்கமாம். தங்க தாம்பளத்தில் பிறந்து, வைர மாளிகையில் வாழ்ந்த எங்கள் அம்மாவுக்கு கேவலம் பதினேழு கோடியெல்லாம் ஒரு தொகையா? அவர் கவனத்துக்கு போயிருந்தால் ஒரு நொடியில் பணத்தை அள்ளிப்போட்டு தன் சொத்தை மீட்டிருப்பாரே!
எங்கு நடந்தது சறுக்கல்?” என்று புலம்பித் தவிக்கிறார்கள். 

’முடக்கம்’ விவகாரத்தில் உண்மையில் என்னதான் நடந்திருக்கிறது என்பதை அ.தி.மு.க. தலைமையானது ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கு சொல்லியே ஆக வேண்டும்.

click me!