
ஜெயலலிதா அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது 75 நாட்களும் உடன் இருந்தவர் சசிகலா மட்டும்தான் என அவரின் அண்ணன் மனைவி இளவரசி கூறியுள்ளார். தான் ஓரிரு நாட்கள் மட்டுமே கண்ணாடிவழியாக ஜெயலலிதாவை பார்த்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான கேள்வி இதுவரை விடை தெரியாமலேயே இருக்கிறது. மர்மத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை 154 பேரிடமும் விசாரணை நிறைவு செய்துள்ளது. ஒருகட்டத்தில் இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் கூறியுள்ளது.
2019 இல் இந்த வழக்கில் உரிய மருத்துவ குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என அப்பல்லோ தொடுத்த வழக்கில் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஆணையத்திற்கு விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆணையத்திற்கு உதவியாக எய்ம்ஸ் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இளவரசி, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அந்த வகையில் முதல் முறையாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர்.
அப்போது ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி கூறியதாவது:- சசிகலா மூலமாக கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் அறிமுகம் ஏற்பட்டது, போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தங்கி இருந்தாலும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எதுவும் என்னிடம் பகிர்ந்தது இல்லை. ஆனால் வீடு குடும்பம் தொடர்பாக மட்டும் பேசுவார். கடந்த 2014ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சிறைக்கு சென்றேன். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு, மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார். 2016 தேர்தலின்போது உடல்நலக்குறைவாக இருந்தது.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது சசிகலா மட்டும்தான் உடன் இருந்து பார்த்துக் கொண்டார். நான் தினமும் சென்று பார்த்து வருவேன், 75 நாளில் ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவை நான் கண்ணாடி வழியாக பார்த்திருக்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார். அவரின் இந்த வாக்குமூலம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது