
எனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாக இருக்கிறேன்.. லேசாக காய்ச்சல்தான் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
சாதாரண செய்திகள்கூட ஊடக உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விடுவது இயற்கை. தொடர்ச்சியான பணிகள் தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றால் உங்களில் ஒருவனான எனக்கு இலேசான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, இன்று (20-6-2022) ராணிப்பேட்டை மாவட்டத்திலும், நாளை (21-6-2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு அரசின் செய்திக் குறிப்பாக வெளியிடப்பட்டது. அத்துடன், நேற்று (19-6-2022) திரு. வி.பி.ராமன் அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாத நிலையில், என்னுடைய உரையினை நமது கழகப் பொதுச் செயலாளர் - மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் படித்தார்கள். இவை செய்திகளாக வெளியானதும், உங்களில் ஒருவனான என் மீது அன்புகொண்ட உடன்பிறப்புகளும், தோழமை இயக்கத்தினரும், அரசியல் பிரமுகர்களும், பல துறைகளைச் சேர்ந்தவர்களும் பதற்றத்துடன் உடல்நலன் குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
என் மீதான அவர்களின் அன்புதான் அந்தப் பதற்றத்திற்கான காரணம் என்பதை அறிவேன். எனினும், பதற்றப்பட வேண்டிய அளவில் எதுவும் இல்லை. இலேசான காய்ச்சல் என்பதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி அதற்குரிய மருந்துகளுடன், கொஞ்சம் ஓய்வும் எடுக்க வேண்டியதாகிவிட்டது. இன்றும் நாளையும் சற்று ஓய்வெடுக்கும் வாய்ப்பு அமைந்தால் அதன்பின் எப்போதும் போல பணியினைத் தொடர்ந்திட முடியும். நலமாகவே இருக்கிறேன். பணிகளைத் தொடர்ந்திடுவேன்.
சரியாகச் சொல்வதென்றால், ஓய்விலும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டுதான் வருகிறேன். நேற்றிரவு சென்னை மாநகரில் நல்ல மழை பெய்து மண்ணையும், மக்களின் மனதையும் குளிர வைத்திருக்கிறது. பொதுவாக வடகிழக்குப் பருவமழைக் காலம்தான் சென்னையில் கனமழை பெய்யும். கடந்த ஆண்டு அத்தகைய மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளையும், கடந்த ஆட்சியின் மோசமான நிர்வாகத்தால் சென்னை மாநகரின் கட்டமைப்புகள் சின்னாபின்னமாகியிருப்பதையும் மனதிற்கொண்டு, இந்த முறை மழை நீர் வடிகால் - மழைநீர் சேமிப்பு ஆகிய பணிகள் விரைவாகவும் முழுமையாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அப்படிப்பட்ட நிலையில், நேற்றிரவு சென்னையில் பெய்த திடீர் மழையால், எந்த இடத்திலாவது தண்ணீர் தேங்கியுள்ளதா, வடிகால் அமைப்பு பணிகளில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து அதிகாலையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசித்து விவரங்களைத் தெரிந்து கொண்டேன்.
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற திராவிட மாடலின் அடிப்படையில், அனைத்து நிலைகளிலும் ஜனநாயகம் தழைத்திட வேண்டும் என்பதே நமது குறிக்கோள். குக்கிராமத்தில் தொடங்கி தலைநகரம் வரை உள்ளாட்சியில் நல்லாட்சி திறம்பட நடைபெற்றால்தான் ஒட்டுமொத்த மாநிலத்தின் கட்டமைப்பும் வளர்ச்சியும் சிறப்பாக அமையும். அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற வேண்டும் என்பதே நமது இலக்கு. அதனால்தான், ஓய்வெடுக்க வேண்டி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நாளிலும், ஓய்வின்றி சிந்தித்து, அதனைச் செயல்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து, இலக்கை அடைவதில் முனைப்பாக இருக்கிறேன்.
இரண்டொரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் அரசுப் பணிகளையும் கழகச் செயல்பாடுகளையும் வழக்கம்போலத் தொடர்ந்திட ஆயத்தமாக இருக்கிறேன். ஓய்வில்லை நமக்கு. முதலிடமே இலக்கு. உடன்பிறப்புகளாம் உங்களுடைய பேரன்பின் பலம் கொண்டு, அந்த இலக்கை அடைவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.