என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ரசிகர்களை தேற்றும் ரஜினிகாந்த்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 29, 2020, 12:53 PM IST
Highlights

நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் தலைவணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும் மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், தொடர்ந்து என்னை ஆதரித்து, முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்கள் அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்புக்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால், நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும் என நடிகர் ரஜனி காந்த் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

என் இந்த முடிவு,  ரஜினி மக்கள் மன்றத்தின் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும்.  என்னை மன்னியுங்கள், 

மக்கள் மன்றத்தினர் கடந்த 3 ஆண்டுகளாக என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பொருளாதாரத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள். அது வீண் போகாது. அந்த புண்ணியம் என்றும் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும். கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நான் உங்களை சந்தித்தபோது நீங்கள் எல்லோரும் ஒருமனதாக உங்கள் உடல்நலம் தான் எங்களுக்கு முக்கியம். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும்  எங்களுக்கு சம்மதமே என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் தலைவணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும். 

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், தொடர்ந்து என்னை ஆதரித்து, முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்கள் அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்புக்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என்கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜுன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். 

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன  சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையாய் பேச என்றுமே தயங்கியதில்லை, உண்மையும் வெளிப்படைத் தன்மையையும் விரும்பும் என் நலத்தில் அக்கறை உள்ள, என் மேல் அன்பு கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்... வாழ்க தமிழ்நாடு... ஜெய்ஹிந்த்... அன்புடன் ரஜினிகாந்த். என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!