மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக நினைக்கவில்லை... வீர சாவர்க்கரின் பேரன் கிளப்பிய அடுத்த சர்ச்சை..!

By Asianet TamilFirst Published Oct 14, 2021, 8:44 PM IST
Highlights

மகாத்மா காந்தியை நான் தேசத்தின் தந்தையாக நினைக்கவில்லை என்று வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.
 

 'வீர சாவர்க்கர் - தேச பிரிவினையை தடுத்திருக்கக்கூடிய மனிதர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “காந்தி கேட்டுக்கொண்டதால் வீர சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார்” என்று குறிப்பிட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைச்சர் ராஜ்நாத்துக்குக் கண்டனம் தெரிவித்தன.
வீர சாவர்க்கர் தனது முதல் மன்னிப்பு கடிதத்தை 1911-ஆம் ஆண்டில் எழுதினார் என்றும் அப்போது காந்தி தென்ஆப்ரிக்காவில் இருந்தார் என்றும் 1915-ஆம் ஆண்டுதான் காந்தி இந்தியாவுக்கு வந்தார் என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. மத்திய அமைச்சர் ராஜ்நாத்தின் கருத்தை அடுத்து, “மகாத்மா காந்திக்குப் பதிலாக வீர சாவர்க்கரை தேசத் தந்தையாக பாஜக முன்னிலைப்படுத்தும்” என்று எ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
ஓவைசியின் குறித்து கருத்துக்கு வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் பதிலளித்துள்ளார். “5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நாட்டை உருவாக்க ஆயிரக்கணக்கான மக்கள் பங்களித்திருக்கிறார்கள். மகாத்மா காந்தியை நான் தேசத்தின் தந்தையாக நினைக்கவில்லை. சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்கவில்லை. எனது தாத்தா அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்புதான் கோரினார். அவர் உண்மையில் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்டிருந்தால், அவருக்கு ஏதாவது பதவி வழங்கப்பட்டிருக்கும்” என்று ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.

click me!