
பாஜக முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடியூரப்பாவை முதலமைச்சராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, அதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்த அவசர வழக்கை உச்சநீதிமன்றம் விடிய, விடிய விசாரித்து தீர்ப்பு வழங்கியதற்கு பாராட்டுத் தெரிவித்த மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இப்படி ஒரு வழக்கை நான் என் வழக்கறிஞர் வாழ்க்கையில் பார்த்ததில்லை என ஆச்சரியமாக கூறியுள்ளார்.
பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பாவை முதலமைச்சராக பதவி ஏற்க அழைத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை இரவே விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
நள்ளிரவு 1.45 மணிக்கு ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் காங்கிரஸ் மனுவின் விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்ற அறை எண் 6-ல் விசாரணை நடைபெற்றது. .ஆளுநர் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாஜக தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆகியோர் வாதாடினர். காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார்.
கிட்டத்தட்ட 4 மணி நேரம் அதாவது விடிய விடிய விசாரணை நடைபெற்றது. இதையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பினருக்கும் நோட்டிஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே.சிக்ரி தீர்ப்பை வாசித்தார். ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ முடியாது. எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை.
இந்த வழக்கு குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணு கோபால், நள்ளிரவில் 4 மணி நேரம் விசாரணை நடத்தி விடிய விடிய நடந்த இப்படி ஒரு வழக்கை நான் என் லைஃப்ல பார்த்ததில்லை என ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.