
நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் என்றும் அநீதி எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் கிருஷ்ண பரமாத்மாவாக வந்து நிற்கேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதலே தமிழ் தேசியம் பேசி தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற தலைவராக வளர்ந்துள்ளார் சீமான். ஆனால் இடையில் பாஜகவுக்கு ஆதரவாக அவர் பேசுகிறார் என்ற விமர்சனத்தை விடுதலை சிறுத்தைகள், திராவிட இயக்கத்தினர் முன்வைத்து வருகின்றனர். மறைமுகமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சீமான் வேலை செய்கிறார் என்றும் அதனால்தான் மறைமுகமாக இந்துத்துவ கருத்துக்களை திணிக்கும் வகையில் அவரது பேச்சுக்கள் இருந்து வருகிறது என்றும் அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில் சீமான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதல்வரின் ஓராண்டு சாதனைக்காக மக்களின் பணத்தை எடுத்து அரசு விளம்பரம் செய்து வருகிறது, காமராஜர் அதை போல செய்யவில்லையே, பேருந்துகள் அனைத்தும் ஓட்டையாக உள்ளது ஓட்டை பேருந்துகளில் பயணம் செய்வோர் குடைபிடித்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் இலவசம் இலவசம் என கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். இலவச திட்டங்களுக்கு எதிரானவன் நான். யார் பணத்தை எடுத்து யாருக்கு இலவசமாக கொடுப்பது, அதேபோல் திமுக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசுகிறார், திமுகவின் ஊழல் குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? பாஜக ஆட்சியில் பிரான்சில் இருந்து ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்கு வரும்போது பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து அதற்கான கோப்புகள் காணாமல் போனது எப்படி? நாட்டைவிட்டுப் போகும்போது பாஜகவுக்கு 500 கோடி ரூபாய் கொடுத்துவிட்டு தான் சென்றதாக நீரவ் மோடி கூறுகிறார். அப்படி இருக்கும்போது திமுகவில் ஊழலை பற்றி பாஜகவினர் பேசுகிறார்கள், அதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை, திமுகவின் ஊழலைப் பற்றி பேசும் அண்ணாமலை ஏன் அதிமுகவின் ஊழலைப் பற்றி பேசுவதில்லை அதிமுக கூட்டணியில் இருப்பதால் அதை பாஜகவினர் மறைக்கின்றனர். மொத்தத்தில் அண்ணாமலைக்கு பாஜகவுக்கும் சாதி மதம் சாமி இதைத்தவிர பேசுவதற்கு வேறு கோட்பாடுகள் இல்லை அரசியல் இல்லை. கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அந்த நிலை இல்லை.
2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கும், அண்ணாமலை தனித்து நிற்பாரா? பாஜகவுக்கு காசு கொடுக்காமல் கூட்டம் சேர்கிறது. காசு கொடுக்காமலேயே நாம் தமிழர் கட்சி 30 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. மாற்றம் ஒரு நாளில் வந்து விடுவதில்லை, அதற்கு பொறுமை தேவை, அநீதியும் அக்கிரமும் பெருகி விட்ட பொழுது நல்லவர்களை தேடுவார்கள். அப்போது சீமானிடம் வருவார்கள், நான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பேரன், அநீதி அக்கிரமம் நடக்கும் இடத்தில் நான் கிருஷ்ண பரமாத்மாவாக வந்து நிற்பேன் இவ்வாறு அவர் கூறினார். அவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனே இந்துத் துவத்தை மறைமுகமாக மக்கள் மத்தியில் திணிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் என விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில், நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் என அவர் பேசியிருப்பதை பலரும் பலவகையிகள் விமர்சித்து வருகின்றனர்.