
ஜெயலிதாவின் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு தான் பேசி வருவதாக நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார். ஆவிகளுடன் தொடர்பு கொண்டு பேசும் முறையை தான் தெரிந்து வைத்துள்ளதாகவும், அந்த அடிப்படையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடனும், தனது தந்தையின் ஆவிகளுடன் தான் பேசி வருவதாகவும் அவர் பகீர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் பெண் பத்திரிக்கையாளர்களை குறித்து தவறான கருத்தை பதிவிட்டு கைதாகும் நிலைக்கு சென்றவர் எஸ்.வி சேகர். சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் என்பது சுருக்கமே எஸ்.வி சேகர். திரைப்படம், நாடகத்துறை என தனக்கென தனி முத்திரை படைத்தவராகவும் இருந்து வருகிறார் அவர். இதுவரை சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான நாடகங்களில்களில் நடித்துள்ளார். திரைப்படங்களுக்கான சென்சார் போர்டில் மாநில தலைவராகவும் பணியாற்றினார். தனது திரைப் புகழைவைத்து 2006 ஆம் ஆண்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் களம் இறங்கிய எஸ்.வி சேகர் அதில் வெற்றி பெற்றார். பின்னர் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து மோதலில் 2009-இல் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பிறகு காங்கிரசுக்கு சென்று பின்னர் அங்கிருந்து 2013ல் பாஜகவில் சேர்ந்தார் அவர். தற்போதும் அக்காட்சியில் சைலண்ட் மோடில் இருந்து வருகிறார் அவர். திரைத் துறையில் சாதிக்க முடிந்த அவரால் அரசியலில் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போனதற்கு அவர் வாய்துடுக்காக பேசும் கருத்துக்களும் அதனால் ஏற்படும் சர்ச்சைகளும்தான் என்ற விமர்சனமும் அவர்மீது உள்ளது. யாராக இருந்தாலும் அவர்களை வெளிப்படையாக விமர்சிப்பவராகவே எஸ்.வி சேகர் இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிக அசிங்கமாக பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போதுவரை நீதிமன்றத்தில் அதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. அதில் சென்னை உயர்நீதிமன்றமே ' நீங்கல்லாம் படித்தவர்களா' எப்படி நீங்கள் பெரிய மனுஷன் என்று வெளியில் சொல்லிக் கொள்கிறீர்கள் என்று அவர் கடுமையாக விமர்சித்திருந்தது, தன் பேச்சுக்கு அப்போது அவர் பகிரங்க மன்னிப்பும் கோரினார். அதேபோல 2000 ரூபாய் நோட்டு கொண்டுவரப்பட்ட சமயத்தில் அவர் ரூபாய் நோட்டில் " சிப் "வைக்கப்பட்டு இருக்கிறது என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனால் இன்னும்கூட அவரை சிப் சேகர் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இப்படி அடுக்கடுக்காக பல சர்ச்சைகளில் சிக்கிவரும் எஸ்.வி சேகர் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் உரிய அங்கிகாரம் இன்றி ஒதுங்கி இருந்துவருகிறார். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர், முன்னாள் முதல்வர் ஜெயலிதா உடன் தனக்கு இருந்த அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அதில் அவர் கூறியிருப்பதாவது, ஜெயலலிதாவிடம் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் எதிரில் பவ்யமாக பணிந்துதான் நிற்பார்கள், ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் இயல்பாகவே இருப்பேன். அதற்கு நான் மிக நேர்மையாக இருந்தது தான் காரணம். அவர்களிடம் இருந்து ஒரு பைசா கூட நான் வாங்கி செலவு செய்ததில்லை. அதை அவரே ஒப்புக் கொண்டு என்னை பாராட்டியுள்ளார். கொடுத்த பத்து பைசா டீக்கு கூட வ்வுச்சர் போட்டு கொடுத்த ஒரே அரசியல்வாதி எஸ்.வி சேகர்தான் என என்னை பாராட்டியுள்ளார். அவரைப் போன்ற நேர்மையானவர்களை இழந்தால் அது நமது கட்சிக்குதான் நஷ்டம் என்று அவர் கூறினார்.
அதனால்தான் இன்றைக்கு கூட நான் ஜெயலலிதா அவர்களின் ஆத்மாவுடன் தொடர்பு கொண்டு அவரின் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டிருக்கிறேன். அது ஒரு மிகப்பெரிய அறிவியல், அதைப்பற்றி நான் விவரமாக பிறகு குறிப்பிடுகிறேன். அது மிகப்பெரிய விஞ்ஞானம், அந்த முறையில்தான் எனது தந்தையுடனும், ஜெயலலிதாவுடனும் நான் பேசி வருகிறேன். இறந்தவர்களுடன் அதாவது ஆவிகளுடன் தொடர்பு கொண்டு பேசும் அறிவியல் அது. அதை நாம் மிக கவனமாக கையாள வேண்டும். அப்படி செய்வது ஒரு கரண்ட் உடன் இருப்பது போல, அதன் அடிப்படையில்தான் நாம் இறந்தவர்களுக்கு அமாவாசை அன்று திதி, தர்ப்பணம் கொடுக்கிறோம். அதாவது அந்த ஆவிகளை ஒழுங்குபடுத்துவதற்காகத்தான் அப்படி செய்யப்படுகிறது. இறந்தவர்களை சாந்தப்படுத்துவதற்காக அது செய்யப்படுகிறது. இறந்து போனது அந்த ஆத்மாவுக்கு தான் இறத்துபோனதே தெரியாது. அந்த ஆத்துமா திரும்பவும் அந்த உடம்புக்குள் வர முயற்சி செய்யும். அதனால்தான் இறந்தவுடன் உடல்களை அடக்கம் செய்து விடுவது நல்லது.
இதை சரியாக விரைந்து செய்வது இந்துக்களும் இஸ்லாமியர்களும் தான். இந்த இரண்டு பிரிவினரும் இறந்துவிட்டால், அதிக நேரத்திற்கு உடலை வைத்திருக்க மாட்டார்கள். இதையெல்லாம் யாரும் தெரிந்து கொள்வது இல்லை, தெரிந்து கொள்ளாமல் ஏதோ அரசியல் லாபத்திற்காக கூட்டம் போட்டு விமர்சித்து பேசுகின்றனர். அவரவர்களுக்கு வரும்போதுதான் அந்த நிலைமை புரியும். அவர்கள் வீட்டில் யாராவது இறந்து விட்டால் அவர்களுக்கு முறையாக சடங்கு செய்வது சாங்கியம் செய்வது எல்லாம் இங்கு நடக்கிறது. இந்த விவகாரத்தில் கைதேர்ந்த விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் என்பவரிடம் இதுகுறித்து பேட்டி எடுங்கள், நிறைய தகவல்களை அறிந்து கொள்ளலாம். ஆன்மாவுடன் பேச வேண்டும் என்று நாம் நினைத்தால் மட்டும் போதாது, அவர்களும் நினைக்க வேண்டும். ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் மையம் என்ற ஒரு மையத்தை வைத்து அறிவியல் பூர்வமாக ரவிச்சந்திரன் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஆவிகளுடன் பேசுவது என்பது 100% உண்மை. வெளியில் கோவில்களில் இருப்பது பொம்மையா? அல்லது அசிங்கமா என்று பேசுபவர்கள் கூட அவர்களது வீட்டில் யாராவது தவறிவிட்டால், திதி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் அடுத்தவர்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. இவ்வாறு என அவர் கூறியுள்ளார்.