
தானும் அரசியலுக்கு வர தயாராகவே உள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள நிலையில், பிரகாஷ் ராஜ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபகாலமாக மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசை தொடர்ச்சியாக பிரகாஷ் ராஜ் சாடிவருகிறார்.
பிரகாஷ் ராஜின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், சினிமா துறையில் இருந்துகொண்டு எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அரசியலுக்கு வந்தால்தான் அதன் ஆழமும் நீளமும் புரியும் என பாஜகவினர் விமர்சித்தனர்.
இந்நிலையில், பெங்களூருவில் நடந்த விழாவில் பேசிய பிரகாஷ் ராஜ், எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் கிடையாது. ஆனால், என்னிடம் தொடர்ந்து சவால் விட்டுக் கொண்டிருந்தால், நானும் அரசியலுக்கு வருவேன். பணம், புகழ் என எல்லாம் இருந்தாலும் அமைதியான வாழ்க்கையைவிட்டு நான் அரசியல் பேச முன்வருகிறேன். அதற்குக் காரணம், மக்களுக்கு அரசியல் மற்றும் சமூக சூழ்நிலைகள் குறித்த புரிதல் வரவேண்டும் என்பதுதான். சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். எனது குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கும் என பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.