
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, மாவட்ட தலைநகரங்களில் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று ஜெயலலிதா காலமானார்.
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதலமைச்சராக பொறுப்பேற்றனர். பல்வேறு அரசியல் குளறுபடிகளுக்கு இடையே, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, தற்போது மாவட்ட தலைநகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழவை, தங்கள் அரசியல் மேடையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் பயன்படுத்தி வருவதாக திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கூறி வருகின்றன.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடப்படுவதற்கு, பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, அரசாங்கத்தின் வரி பணத்தில் நடத்த வேண்டாம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரசாங்க வரி பணத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்த வேண்டாம் என்றும், அதிமுகவின் சொந்த செலவில் விழாவை நடத்திக் கொள்ளட்டும் என்றும் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
புதுக்கோட்டையில், நேற்று பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள், தமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் குவாரி ஊழலில் ரூ.350 கோடி அரசுக்கு இழப்பு ஏற்டுத்தி மோசடி செய்தது; பான், குட்கா ஊழலில் ரூ.40 கோடி லஞ்சம் பெற்றது; ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பல கோடி ரூபாய் பட்டுவாடா செய்தது என வருமான வரித்துறை கண்டுபிடித்து குற்றம் சாட்டி உள்ளதாக அவர் கூறினார். இதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தேசத்துரோக வழக்கு போட வேண்டும் என்றார்.
அவர்தான் சிறைக்கு செல்ல வேண்டும். ஆனால், மத்திய அரசு கதிராமங்கலம் பிரச்சனைக்கு போராடிய பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்கு போட்டுள்ளதாக கூறினார்.
நான் எம்.ஜி.ஆரின் பரம ரசிகன் என்று கூறிய அவர், பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துள்ளேன் என்றார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்த வேண்டாம் என்று திமுக சொல்லவில்லை. ஆனால் அரசாங்க வரி பணத்தில் அதை நடத்த வேண்டாம் என்றுதான் கூறுகிறேன் என்றார். அதிமுகவின் சொந்த செலவில் நூற்றாண்டு விழாவை நடத்தக் கொள்ளட்டும் எனவும் ஸ்டாலின் பேசினார்.