
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்குத்தான் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது சுற்றுசூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும், இதன் காரணமாக நிலத்தடி நீர் வளம் குறையும் எனவும், கூறி இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற திட்டங்கள் பொதுவாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்தப்படும் எனவும், ஆனால் தற்போது விவசாயப் பகுதியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தப் பார்கின்றனர் எனவும் போராட்டத்தில் ஈட்படுபவர்கள் குற்றசாட்டை முன் வைக்கின்றனர்.
பல்வேறு அரசியல் தரப்புகளும், இளைஞர்களும், சினிமா பிரபலங்களும் இந்த திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஒரு திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது முடியாத செயல் எனவும், அதற்கு அரசியல்வாதிகள் மாணவர்களை போராட அழைப்பது மிகவும் தவறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகத்தின் எதிர்காலம் பாதிக்கும் எனவும், 2009ல் துவங்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பாஜக அரசுதான் கொண்டு வருகிறது போன்ற தோற்றத்தை உருவாக்குவது தவறு எனவும், தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.