பெண் ஏன் அடிமையானால் புத்தகம்: தடுத்த பாஜக.. பேடிகள் என கடுமையாக விமர்சித்த சுப.வீ.

By Ezhilarasan BabuFirst Published Nov 13, 2021, 2:15 PM IST
Highlights

இந்த அராஜகப் போக்கைக் கண்டித்து, நேற்று திருப்பூரில், திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜகவைக் கண்டிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

அரசு பள்ளி மாணவிகளுக்கு பெண் ஏன் அடிமையானால் புத்தகம் கொடுக்கப்பட்டதை  தடுக்க முயன்ற பாஜகவினரை திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளரும் பேரசிரியருமான சுப.வீ பேடிகள் என்று விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையில் காரணத்துடன் அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். அதன் விவரம், 

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி! அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டாரடி - கிளியே உச்சத்தில்  கொண்டாரடி!" என்னும் பாரதியாரின் பாடல் வரிகளை நம் பாஜக நண்பர்கள் பலமுறை படித்திருப்பார்கள்! ஆனாலும் அதன் உட்பொருளை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. புரிந்திருக்குமானால், இப்படித் திருப்பூரில் ஒரு பள்ளிக்குச் சென்று தந்தை பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" என்னும் நூலை மாணவியருக்கு வழங்கக்கூடாது என்று தலைமையாசிரியரோடு மல்லுக் கட்டியிருக்க மாட்டார்கள்!

அந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அய்யா பெரியாரால், 1926 முதல் 1931 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. 1942 ஆம் ஆண்டு நூலாக வெளிவந்தது. ஏறத்தாழ 90-95 ஆண்டுகளுக்கு முன்னால்  எழுதப்பட்ட கட்டுரைகளைப்  பார்த்து  இப்போதும் அஞ்சுகின்றனர் என்றால், "அச்சமும் பேடிமையும், அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டாரடி" என்றுதானே பொருள்! சில நாள்களுக்கு முன்,  திருப்பூர் தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ள, ஜெய்வாபாய் மாநகராட்சிப்  பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, பாஜகவின் பொறுப்பாளர்கள் சிலர் வந்துள்ளனர். அப்பள்ளியில் 7000 மாணவியர் படிக்கின்றனர். மிகப் பெரிய பெண்கள் பள்ளி அது! தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இலவசமாகக் கொடுத்த "பெண் ஏன் அடிமையானாள்?" என்னும் புத்தகத்தின் 2000 படிகளை நீங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்று கேட்டுத்  தலைமை ஆசிரியை ஸ்டெல்லாவுடன் சண்டையிட்டுள்ளனர். அவற்றை மாணவிகளுக்குக்  கொடுத்தால், பள்ளிக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர்.  

இந்த அராஜகப் போக்கைக் கண்டித்து, நேற்று திருப்பூரில், திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜகவைக் கண்டிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று காலை அனைத்துக் கட்சியினரும், திருப்பூர் காவல் நிலையத்தில்புகார் மனு ஒன்று கொடுக்கவும்  திட்டமிட்டுள்ளனர். அய்யா பெரியார்தான் சொல்வார் நாம் விளம்பரத்திற்குச் செலவு செய்ய வேண்டியதில்லை, அதனை நம் எதிரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்பார். இன்றும் அந்த உதவியை அவர்கள் செய்துகொண்டே இருக்கின்றனர். பேசாமல் விட்டிருந்தால்  அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே அப்பள்ளியைத் தாண்டி வெளியில் தெரிந்திருக்காது. இன்று தமிழகம் முத்துவதும் அந்தப் புத்தகத்திற்கான நல்ல அறிமுகம் ஒன்றும் கிடைத்துள்ளது. 

ஏற்கனவே பல லட்சம் நூல்கள் விற்பனையாகியுள்ள நிலையில், இப்போது  மீண்டும் ஒரு விளம்பரத்தை பாஜகவினர் அந்நூலுக்குக் கொடுத்துள்ளனர். அந்தப் புத்தகம் கண்டு ஏன் மிரள்கின்றனர் என்பதற்கு ஒரு நியாயமான காரணமும் இருக்கவே செய்கிறது. அந்த நூல்தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக, இந்திய அரசு சட்டம் கொண்டுவருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, சொத்துரிமை குறித்தும், கர்ப்பத்  தடை குறித்தும் பேசிய நூல்! பெண்களுக்கான மணமுறிவு உரிமையை வலியுறுத்திய நூலும் அதுதான்! இவ்வளவு உரிமைகளும் பெண்களுக்கு வந்துவிட்டால் பிறகு பாலினச் சமத்துவம் வந்துவிடுமே! அது இந்துத்துவாவிற்கு எதிரானதாயிற்றே! அதனால்தான் அஞ்சுகிறார்கள். 

இதில் இன்னொரு சுவையான  செய்தியும் இருக்கிறது. 7000 பேர் படிக்கும் பள்ளிக்கு ஏன் 2000 நூல்களை மட்டும் நம் த.பெ.தி.க தோழர்கள் வழங்கியுள்ளனர்? வேறொன்றுமில்லை! ஏற்கனவே அப்பள்ளி மாணவியர் 5000 பேருக்கு அந்நூல்கள் வழங்கப்பட்டு விட்டன!  பரிதாபத்திற்குரிய பாஜக நண்பர்களுக்கு இந்த உண்மை தெரியாது! என்று அதில் கூறப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பாஜகவுக்கும் திமுக வுக்கும் இடையேயான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளரும், பேரசிரியருமான சுப.வீயை பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக விமரசித்து வருகின்றனர். இந்நிலையில் சுப.வீ காட்டமாக அறிக்கை வெளியிட்டிருப்பது மோதலை மேலும் அதிகபடுத்தும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. 
 

click me!