
பாரதிய ஜனதா கட்சிக்கு கடந்த 5 மாதங்களில் 8000 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்தது எப்படி? என சமூக சேவகர் அன்னா ஹசாரே கேள்வி எழுப்பி உள்ளார்.
முதலிடம்
பிரபல சமூக சேவகர் அன்னாஹசாரே அசாம் மாநிலம் கவுகாத்தியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. ஆசியா கண்டத்தில் உள்ள ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ரூ. 8 ஆயிரம் கோடி
பாரதிய ஜனதா கட்சிக்கு கடந்த 5 மாதங்களில் 8 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. இதை நான் சொல்லவில்லை. போர்ப்ஸ் பத்திரிகை ஆய்வு செய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது? வறுமையில் வாடும் நாட்டு மக்களுக்கு உரிய உதவிகளும், சலுகைகளும் கிடைப்பதே இல்லை. அவர்களுக்கு போதுமான பணமும் கிடைப்பது இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு பணம் கிடைத்து விடுகிறது.
விவசாயிகள் வேதனை
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் கொடுக்கிறார்கள். ஆனால் விவசாயிகளிடம் அதிகப்படியான வரி வசூலித்து விடுகிறார்கள்.
விவசாயிகளை வாட்டி வதைக்கும் வரி விதிப்பை சீரமைக்க வேண்டும். ஒரே மாதிரியான வரி விதிப்பை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்ய வேண்டும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரிய தொழில் அதிபர்களை விட விவசாயிகளிடம் அதிக வரியை வசூலிக்கிறது. இந்த முரண்பாடுகள் களையப்பட வேண்டும்.
போராட்டம்
புதிய அரசு எப்படி செயல்படுகிறது என்பதற்கு கால அவகாசம் கொடுத்து பார்க்க வேண்டும் என்பதால் தான் கடந்த 3 ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன். இனி அமைதியாக இருக்கப் போவதில்லை.
நான் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் புதிய இயக்கம் தொடங்கப் போகிறேன். வலுவான லோக்பாலை வலியுறுத்தி போராட்டம் நடத்துவேன். நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்தப்படும்.
அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் எனது இயக்கத்தில் சேர அனுமதி இல்லை. கட்சிகளை துறந்து விட்டு என்னுடன் வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.