
அரசியல் சாசனத்தின்படியேதான ஆளுநர் ஆய்வு செய்கிறார் என்றும், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த பேசுவது சட்டவிரோதம் என்றும் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். கோவையில் தனது ஆய்வைத் தொடங்கிய ஆளுநர் நெல்லை, கன்னியாகுமரி போன்ற இடங்கிளில் ஆய்வு செய்து பொது மக்களை சந்தித்து வருகிறார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்
ஆளுநர் புரோகித் நேற்று முன்தினம் ஆய்வு செய்வதற்காக கடலூர் சென்றபோது திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டின. மேலும் ஆளுநரின் கடலூர் விசிட் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் அரசியல் சாசனத்தின்படி ஆளுர் ஆய்வு செய்ய சட்டத்தில் இடமுள்ளது என்றும், ஆய்வுகள் தொடரும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் கூடுதல் தலைமைச்செயலாளர் ஆர்.ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் இந்திய அரசியல் சாசனத்தின்படி ஒரு மாநிலத்தின் நிர்வாகத் தலைமையில் இருப்பவர் கவர்னர் தான். மாநில நிர்வாகத்தின் அனைத்து தரப்பு தகவலையும் பெறுவதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதுபோல மாநிலத்தின் அனைத்து பகுதிக்கும் செல்வதற்கு அவருக்கு தடை கிடையாது.
ஆனால் அப்படி செயல்படுவது பற்றி ஒருதலைப்பட்சமாக தகவல்கள், விவாதங்கள், கருத்துகள் கூறப்படுகின்றன. மஞ்சள் காமாலை கண்களோடு பார்க்கும் பொருளெல்லாம் மஞ்சளாக தெரிவது போல சில கருத்துகள் மிகவும் தரம் தாழ்ந்தவைகளாக உள்ளன. நியாயத்துக்கு புறம்பான கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
அமைச்சரவை என்ற நிர்வாக அமைப்பும் கவர்னரால் தான் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், அமைச்சர்கள் மூலமாக கவர்னருக்கு மாநில அரசு நிர்வாகத்தில் நேரடி தொடர்பு இருப்பதை அறிய முடியும் என்றும் , இந்த தொடர்பின் மூலம், கவர்னர் மற்றும் அரசு நிர்வாகம் ஆகிய இரட்டை பொறுப்பு இருப்பதை உணரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் கவர்னர் தனிப்பட்ட முறையில் அவருக்கென்று இருக்கும் அதிகாரத்தின்படி, அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமலேயே செயல்படும் அம்சங்களும் உள்ளன.
மாவட்டங்களுக்கு சென்று அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்துவது, கவர்னரின் கடமைகளுக்கு உள்பட்டவை அல்ல என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. மாநில அரசின் நிர்வாகம் குறித்த விவரங்களை கவர்னர் அறிந்து கொள்வது, கவர்னரின் கடமைகளில் ஒன்று என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுபோன்ற மாவட்ட அளவிலான கூட்டங்களை நடத்துவது, அரசியல் சாசனத்தின்படி ஒரு கவர்னரின் பங்களிப்புதான் என்பது உறுதியான ஒன்று. எனவே அரசியல் சாசனம் பற்றி தெரியாமல் கவர்னரின் செயல்பாடுகள் பற்றி பேசி பதிவு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அது சட்ட விரோதமானது. அரசியல் சாசன அதிகாரம் கொண்ட கவர்னரின் அலுவலகத்தை மரியாதை குறைவாக பேசுவது சட்டப்படி தவறாகும் என கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.