இன்னும் எத்தனை அனிதாக்களை வாரி கொடுக்க வேண்டும்..!! மாணவி சுபஸ்ரீ தற்கொலையில், மாணவர் அமைப்பு கொந்தளிப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2020, 10:14 AM IST
Highlights

பல மாணவர்கள் போதிய கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் தேர்வினால் தன்னுடைய மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவு நிறைவேறாததால் விரக்தி அடைந்து  தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கோவையில் நீட் தேர்விற்காக தயாராகி வந்த சுபஸ்ரீ என்ற 19வயது மாணவி, தற்கொலை செய்யது கொண்டுள்ள சம்பவம் அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மருத்துவராகி பிற உயிர்களை காப்பாற்ற வேண்டிய மாணவர்கள் நீட் தேர்வினால் தங்கள் உயிர்களை இழக்கும் அவலம் தொடர்கிறது, இது போல் இன்னும் எத்தனை மருத்துவர்களின் உயிரை கொடுக்க வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:-

தமிழகத்தில் நீட் தேர்வினால் மீண்டுமொரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் துயரத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற 19 வயது  மாணவி கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு விரைவில் நடைபெற உள்ளதால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டு நேற்று காலை தற்கொலை செய்துள்ளார். இந்த மாணவியின் தற்கொலை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு செய்த படுகொலையாகும். தற்பொழுது கொரோனா காலகட்டமாக இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்தியா முழுவதும் கோரிக்கைகள் வலுப்பெற்று வந்தபோதிலும் மத்திய அரசு இதற்கு சிறிதும் கூட செவிசாய்க்கவில்லை. இந்த நீட் தேர்வினால் இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகின்றோம்? மருத்துவராகி மருத்துவம் பார்க்கும் கனவில் இருக்கும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வது இந்தியாவிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். 

அதேபோல் மாணவர்கள் தங்களின் லட்சியத்தை அடையும் வரை வரும் தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து சரித்திரம் படைக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு இவ்வாறு தற்கொலை செய்து கொள்வது தீர்வாக அமையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மத்தியில் ஆட்சி செய்து வரும்  ஃபாசிச பாஜக அரசு  தான் ஆட்சிக்கு வந்தது முதல் இந்திய மக்களையும், குறிப்பாக தமிழக மக்களையும், தமிழக மாணவர்களையும் திட்டமிட்டு வஞ்சித்து வருகின்றது. அதன் அடிப்படையில் மாணவர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் தான் மருத்துவ படிப்பு படிப்பதற்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் என்ற நுழைவு தேர்வு. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களை எக்காலத்திலும் மருத்துவராக ஆகக்கூடாது என்ற  நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் பல கட்டப் போராட்டங்கள் அரசியல் கட்சிகளாலும், மாணவர் அமைப்புகளாலும் நடத்தப்பட்டுள்ளன. கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் தமிழகம் முழுவதும் பல கட்ட போராட்டங்களையும், நீட் எதிர்ப்பு பிரச்சாரங்களையும் நடத்தியுள்ளது, இன்றளவும் நடத்தி வருகின்றது. 

பல மாணவர்கள் போதிய கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் தேர்வினால் தன்னுடைய மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவு நிறைவேறாததால் விரக்தி அடைந்து  தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது மருத்துவர் அனிதா தற்கொலை சம்பவம். 12ம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வினால் மருத்துவர் ஆக முடியாததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்ப்படுத்தியது. அனிதாவின் படுகொலைக்கு நீதி வேண்டும் எனவும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், பல கட்ட போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. மேலும் இன்றளவும் தமிழகத்தில் உள்ள மாணவ அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்களின் ஒருமித்த கருத்து சமூக நீதிக்கு எதிராக உள்ள நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே. 

தமிழக அரசு இனியாவது சற்றும் காலம் தாழ்த்தாமல் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், கொரோனா கால சூழ்நிலையை கருத்திற் கொண்டும் அரசு உடனடியாக கொள்கை முடிவெடுத்து நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறி அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!