எச்சில் சோறு தின்ற எடுபுடிக்கே இத்தனைக் கோடி என்றால் எடப்பாடிக்கு எத்தனைக் கோடியோ?- நாஞ்சில் சம்பத்..!

By Thiraviaraj RMFirst Published Oct 23, 2021, 5:34 PM IST
Highlights

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் இளங்கோவன் வீட்டில் நடந்த ரெய்டு குறைத்து நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் இளங்கோவன் வீட்டில் நடந்த ரெய்டு குறைத்து நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.



முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலது கரமாக செயல்படுபவர் என அறியப்படுபவர் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன். இவருக்கு சொந்தமான 27 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இந்நிலையில் இவர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் பார்வை பதிந்தது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தற்போது இளங்கோவன் சேலத்தில் மாளிகையை போன்ற பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த மாளிகையைப் பற்றி லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரகசியமாக விசாரித்து வந்திருக்கிறார்கள். இதில்தான் இளங்கோவன் வசமாக சிக்கிக் கொண்டார் என்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள். 

அதுமட்டுமல்ல, இவருடைய சொத்துகள், வருமானம், தொழில் என பலவற்றைப் பற்றியும் போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதுதொடர்பாக திரட்டப்பட்ட தகவலில் வருமானத்துக்கு அதிகமாக 131 சதவீதம் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கிட்டுள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


எப்.ஐ.ஆரில், இளங்கோவன் 2014 - 2020 காலத்தில் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய பெயரிலும் மகன் பெயரிலும் சொத்துக்களை குவித்துள்ளதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014-இல் இளங்கோவனின் சொத்து மதிப்பு ரூ.30 லட்சமாக இருந்த நிலையில், 2020-ஆம் ஆண்டில் ரூ. 5.6 கோடியாக அதிகரித்திருக்கிறது. ஆனால், அவருடைய மாத வருமானத்தை வைத்து பார்த்தால் சொத்து மதிப்பு ரூ. 2.88 கோடி மட்டுமே இருந்திருக்க வேண்டும். எனவே, பதவியில் இருந்த காலத்தில் ரூ. 5.30 கோடி சொத்து சேர்த்துள்ளார் என்றும் இது வருமானத்துக்கு அதிகமாக 131 சதவீதம் அதிகம் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து இலகி, அமமுகவில் இணைந்து பின்னர் அரசியலை விட்டே விலகி இருக்கும் நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ எச்சில் சோறு தின்ற எடுபுடிக்கே இத்தனைக் கோடி என்றால் எடப்பாடிக்கு எத்தனைக் கோடியோ?’’ என வினவியுள்ளார். 
 

click me!