
திமுகவின் புதிய பொதுச்செயலாளர் தேர்தல் 27 ஜூலை 1969 அன்று நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார் நாவலர் நெடுஞ்செழியன். அமைச்சரவையில் இடம்பெறாததால் கட்சிப் பணியில் முழுமையாகச் செயல்பட அந்தப் பதவி அவசியம் என்றார் நெடுஞ்செழியன்.
முதலமைச்சர் கருணாநிதி கருத்து எதையும் சொல்லாவிட்டாலும் கட்சி ஆட்சி இரண்டையும் தன்னுள்ளே கொண்டுவர திட்டமிட்டிருந்தார். அவருக்கு ஆதரவான காய் நகர்த்தல்கள் பலமாக நடந்துகொண்டிருந்தன.
கட்சியின் பொதுச்செயலாளராக கருணாநிதிதான் வரவேண்டும்; அதுவும் போட்டி எதுவும் இல்லாமல் என்றார் நண்பர் எம்.ஜி.ஆர். அதன் அர்த்தம் நெடுஞ்செழியன் போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை. ஒருகட்டத்தில் தன்னுடைய கருத்தை பகிரங்கமாகவே அறிவித்தார் எம்.ஜி.ஆர்.
முதலமைச்சர் கருணாநிதி பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவது என்று முடிவெடுத்தார் , நெடுஞ்செழியனும் விடாப்பிடியாக இருந்தார். அதனால் இதைச் சரிக்கட்டும் வகையில் திமுகவில் சட்டத்திட்டங்களில் ஒரு திருத்தம் கொண்டுவர முடிவானது. அவைத்தலைவர் என்ற பதவியைத் தலைவர் என்று மாற்றிக் கொள்ளலாம்.
பொதுச்செயலாளர் நிறைவேற்ற வேண்டிய பணிகளைத் தலைவருடன் கலந்துபேசி, இருவரும் சேர்ந்து முடிவெடுக்கலாம். இதனை திமுக பொதுக்குழு ஏற்றுக்கொண்டது. அதன்படி திமுக தலைவராக கருணாநிதி, பொதுச்செயலாளராக நெடுஞ்செழியன் இருவரும் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டனர். எம்.ஜி.ஆர் பொருளாளரானார்.
இதன் பின்னர் நடந்தது தான் சுவாரஸ்யம். பெரிய கோட்டை அழிக்க அதைவிட பெரிய கோட்டை வரைவதை போல் சக்திமிக்க பொதுச்செயலாளர் பதவியை விட்டுத்தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த நெடுஞ்செழியனை சட்டத்திட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டு வந்து நெடுஞ்செழியனுடன் சேர்த்து பொதுச்செயலாளர் பதவியையும் டம்மி ஆக்கினார். அது முதல் திமுகவில் தலைவர் பதவி பலமானது.
பைபாஸ் போட்டு கட்சி ஆட்சி இரண்டையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த கருணாநிதி 48 ஆண்டுகளாக எதிர்ப்பில்லா தலைவராக உள்ளார்.