
ஆர்கே நகர் தொகுதியின் இடைத் தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளும் குதித்துவிட்டன.
குறிப்பாக திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக சசிகலா அணி வேட்பாளர் தினகரனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தொகுதியிலேயே சில அமைச்சர்கள் முகாமிட்டு, வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதேபோல், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மதுசூதனனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திரைப்பட நடிகை லதா, வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து ஆர்கே நகரில் பிரச்சாரம் செய்தார். தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில், ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். அதில், நடிகை லதா பேசியதாவது:-
எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய கட்சி அதிமுக. அதை யாருக்கும் விட்டு கொடுக்க கூடாது. இங்கு போட்டியிடும் டி.டி.வி.தினகரன் மீது ஏராளான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் மீது வழக்கும் உள்ளது.
குறிப்பாக அவர் மீது மோசடி புகார் உள்ளது. மோசடி செய்து வருபவர் மக்களுக்கு எப்படி நல்லது செய்வார். தொகுதியில் உள்ள மக்களிடம் பணத்தை கொடுத்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார். அது நடக்க கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.