இப்படியே நடந்தா எப்படி ஓட்டுப்போட வருவாங்க.? ஓட்டுப்பதிவு குறைவுக்கு பிரேமலதா அடுக்கிய காரணங்கள்!

Published : Feb 19, 2022, 08:10 PM IST
இப்படியே நடந்தா எப்படி ஓட்டுப்போட வருவாங்க.? ஓட்டுப்பதிவு குறைவுக்கு பிரேமலதா அடுக்கிய காரணங்கள்!

சுருக்கம்

தேர்தலில் நான் பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்களிடம் ஒரு வெறுப்பை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு முறையும் தேர்தல் வந்தால், வாக்களிக்க பணம் கொடுக்கிறார்கள், கொடுக்கின்ற எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவது இல்லை.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஓட்டுப் பதிவு குறைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகளில் இன்று தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு மந்தமான நிலையில் இருந்தது.  மாநகராட்சிப் பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருக்கிறது. குறிப்பாக  தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாகவே இருந்தது. சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 41சதவீத மக்களே வாக்களித்திருந்தார்கள். தேர்தலில் பங்கேற்று வாக்களிக்கும்படி சென்னை மாநகராட்சியே ட்விட்டரில் பதிவிட்டு அழைப்பு விடுத்திருந்தது. தேர்தலில் கிராமப்புறங்களில் வாக்களிக்க இருக்கும் ஆர்வம், நகர்ப்புறங்களில் இல்லாமல் போனது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.   

இந்நிலையில் சென்னை உள்பட நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைந்தது பற்றி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேர்தலில் ஏன் இன்று வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது தெரியுமா? மக்களுக்கே இந்த ஜனநாயக தேர்தலின் மீது நம்பிக்கை இல்லை. அதுதான் காரணம். ஓட்டுக்கு காசு கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வருகிறார்கள். இதனால், எதற்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனவேதனையும் வெறுப்பின் உச்சம் போன்றவற்றால், இன்று யாருமே வாக்களிக்க வரவில்லை.

தேர்தலில் நான் பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்களிடம் ஒரு வெறுப்பை பார்க்க முடிந்தது. அதனால், மக்கள் யாருக்கும் தேர்தலில் விருப்பமே இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு முறையும் தேர்தல் வந்தால், வாக்களிக்க பணம் கொடுக்கிறார்கள், கொடுக்கின்ற எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவது இல்லை. பின்னர் எதற்காக வாக்காளிக்க செல்ல வேண்டும் என்ற வெறுப்பின் உச்சத்தை என்னால் பார்க்க முடிந்தது” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!