தயவு செய்து 2 மாசத்துக்கு வாடகை வாங்காதீங்க..! உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த வாசன்..!

By Manikandan S R SFirst Published Mar 31, 2020, 2:43 PM IST
Highlights

உரிமையாளர்கள் குறைந்த பட்சம் 2 மாதத்திற்காவது மாத வாடகை வேண்டாம் என்று கூறி வாடகை வாங்காமல் இருந்தால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் பயனளிக்கும். 

உலகளவில் கொரோனா தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்தநிலையில் அசாதாரண சூழல் காரணமாக வீடு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருப்போரிடம் 2 மாதங்களுக்கு வாடகை வசூலிக்க வேண்டாம் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 
கொரோனா பாதிப்பால் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால் இதனை சமாளிக்க அரசு மட்டுமே உதவிகள் செய்வது போதாது. வசதி படைத்தவர்கள், வீடு, கடை, கட்டிடம் போன்றவற்றை வாடகைக்கு விட்டிருக்கும் உரிமையாளர்கள் என பல தரப்பினரும் தானாக முன்வந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வது தான் சிறப்பானது. எனவே வீடு, கடை, கட்டிடம் போன்றவற்றை வாடகைக்கு விட்டிருப்போர் 2 மாதத்திற்கு வாடகையை கேட்காமல் இருப்பதற்காக, வாடகைக்கு இருப்போர் வாடகையை கொடுக்க முன்வந்தால் வாங்கிக்கொள்ளலாம் என்பதற்காக தமிழக அரசும் முயற்சிகள் மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

மேலும் உரிமையாளர்கள் குறைந்த பட்சம் 2 மாதத்திற்காவது மாத வாடகை வேண்டாம் என்று கூறி வாடகை வாங்காமல் இருந்தால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் பயனளிக்கும். குறிப்பாக உரிமையாளர்கள் தங்களது வீடு, கடை, கட்டிடம் போன்றவற்றிற்காக வங்கியில் கடன் வாங்கியிருந்தாலும் அதற்கான மாத தவணையை கட்ட மத்திய அரசு தற்போது விலக்கு அளித்திருப்பது கவனத்திற்குரியது. எனவே கொரோனாவின் பாதிப்பிலிருந்து தமிழக மக்களை மீட்டெடுக்க அரசு உதவிகள் செய்வதோடு, பொது மக்களில் பலர் உதவிகள் செய்ய முன் வந்திருப்பது ஆதரவு அளிக்கிறது என்றாலும் கூட இன்னும் கூடுதலான உதவிகள் தேவைப்படுவதால் அனைத்து தரப்பினரும் உதவிகள் செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறு வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!