Hijab issue : ஹிஜாப் அணிவது மத நம்பிக்கையா.? அம்பலபட்டுப்போன போலி மதசார்பின்மைவாதிகள்.. தமிழக பாஜக ஆவேசம்!

Published : Feb 07, 2022, 11:11 PM IST
Hijab issue : ஹிஜாப் அணிவது மத நம்பிக்கையா.? அம்பலபட்டுப்போன போலி மதசார்பின்மைவாதிகள்.. தமிழக பாஜக ஆவேசம்!

சுருக்கம்

எந்த மாணவ, மாணவியும் தங்கள் மத சின்னங்களை தங்கள் நண்பர்களிடையே அடையாளப்படுத்தி கொள்ள விரும்ப மாட்டார்கள். ஆனால், மத சடங்குகளை அனைவரின் மத்தியிலும் விதைக்க முற்படுவது மத அடிப்படைவாதமே. தங்களின் மத நம்பிக்கைகள் தங்களின் அடிப்படை உரிமை என்று வாதிடுவார்களேயானால் பெரும்பான்மை மக்களுடைய மத நம்பிக்கைகளின் அடையாளத்தோடும் பள்ளிகள் இயங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறும். 

'ஹிஜாப்' விவகாரத்தில் மத நம்பிக்கைகளை அனுமதிக்க வேண்டும் என்று சொல்வது அப்பட்டமான மதவாதமே. ஹிந்து அடையாளங்கள் இருக்க கூடாது என்று சொல்பவர்கள், போலி மதச்சார்பின்மையை கடைபிடிக்கும் கபடதாரிகளே என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கர்நாடகாவில் பள்ளி ஒன்றில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பறையில் அமர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மத சார்பின்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும் என்றும், இதே போல் மாற்று மதத்தினரும் தங்களின் மத நம்பிக்கைகளின் படி சீருடை கட்டுப்பாட்டை மீறி வேறு ஏதேனும் உடை அணிந்து வந்தார்கள் என்றால், மாணவ சமுதாயத்தில் கட்டுப்பாடு இல்லாது போய் விடும் என்றும் அம்மாநில அரசு ஹிஜாப் அணிவதை தடை செய்துள்ளது. ஆசிரியர்களை, ஆசிரியர்களாகதான் நாம் பார்த்தோமேயன்றி, என்றுமே நாம் இஸ்லாமிய ஆசிரியர் என்றோ, ஹிந்து ஆசிரியர் என்றோ, கிருஸ்துவ ஆசிரியர் என்றோ பார்த்ததில்லை. 

நம்முடன் பயின்ற மாணவர்களுடன் இஸ்லாமியர் என்றோ கிறிஸ்துவர் என்றோ பழகியதில்லை.  நான் படித்த 'இந்திரா நகர், ஹிந்து மேல் நிலைப்பள்ளியில்' இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் ஆசிரியையாக இருந்தார். நான் இருந்த திருவல்லிக்கேணியில் உள்ள முஸ்லீம் உயர் நிலை பள்ளியில் ஒரு ஹிந்து, தலைமை ஆசிரியராக இருந்தார். எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தங்கள் மதத்தை நம் மீது திணித்ததாக நினைவில் இல்லை. ஹிந்து நிர்வாகம் செலுத்தும் பள்ளிகளில் கண்டிப்பாக குங்குமம், திருநீறு இட்டு கொண்டே வர வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தியதில்லை. இதற்கு முக்கிய காரணம், பெரும்பான்மை ஹிந்து பெரியோர்கள், ஆன்மீகவாதிகள் யாரும் மத ரீதியான அழுத்தத்தை பள்ளிகளிலோ, மாணவர்களிடத்திலோ கொடுக்கவில்லை என்பதே. மத உரிமைகள் குறித்தும், நம்பிக்கைகள் குறித்தும்  ஹிந்துக்கள்  நிர்வாகம் செய்யும்  பள்ளிகளில் பேசியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில்,  தமிழகத்தில் கல்வித்துறையில்  பல்வேறு கிருஸ்துவ பள்ளிகளின் பங்களிப்பை நாம் மறுக்க முடியாது என்றாலும் கூட, அப்பள்ளிகளில் ஒரு சில பிரிவினர் குங்குமம், திருநீறு வைக்க கூடாது என்று அன்றிலிருந்து இன்று வரை கட்டாயமாக வலியுறுத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல பள்ளிகளில் பெற்றோர்கள் நிர்வாகத்துடன் சண்டையிடுவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. என்னுடன் பள்ளியில் படித்த ஆண்/பெண் நண்பர்கள் யாரும் தங்களின் மத நம்பிக்கைகளை வகுப்புகளில் தினசரி நடவடிக்கைகளில் திணித்து கொண்டதாக எனக்கு நினைவில்லை. பள்ளி சீருடை என்ற விதி, மத, சாதி அடையாளங்களை தவிர்த்து, அனைவரும் ஒன்று  என்ற சிந்தனையை வலியுறுத்துவதற்காகதான். ஆனால், மத அடையாளம் என்ற பெயரில் அந்த விதியை மீறுவது நியாயமல்ல. மேலும், பள்ளியில் அனுமதிக்கப்படும்போதே,  மாணவ, மாணவிகள் பள்ளியின் விதிமுறைப்படி சீருடை அணிந்து வருவதாக ஏற்றுக்கொண்டே  இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாணவ, மாணவிகளால்  எந்த இடைவெளியையும் உருவாக்க முடியாது என்பது உறுதி. ஆனால், குழந்தைகளிடையே இந்த பிரிவினை பரவுவது ஏன்? யாரால் என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். கடந்த 40 வருடங்களின் புள்ளி விவரங்களின் அடிப்படையில், இந்தியாவில் கிருஸ்துவ மற்றும் முஸ்லிம்களின் மக்கள் தொகை, எண்ணிக்கையிலும், விழுக்காட்டிலும் அதிகரித்து வருவதை யாராலும் மறுக்க முடியாது. அதே போல், கடந்த 30 வருடங்களாக கல்வி பயிலும் இஸ்லாமிய,கிருஸ்துவ மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதிக அளவில் மக்கள் கல்வி பெறுவது வரவேற்கபடவேண்டியதுதான் என்றாலும், மாசற்ற கல்வியில் மதவாதத்தை பிஞ்சு உள்ளங்களில் விதைக்க முற்படுவதை ஏற்க முடியாது. 

எந்த மாணவ, மாணவியும் தங்கள் மத சின்னங்களை தங்கள் நண்பர்களிடையே அடையாளப்படுத்தி கொள்ள விரும்ப மாட்டார்கள். ஆனால், மத சடங்குகளை அனைவரின் மத்தியிலும் விதைக்க முற்படுவது மத அடிப்படைவாதமே. தங்களின் மத நம்பிக்கைகள் தங்களின் அடிப்படை உரிமை என்று வாதிடுவார்களேயானால் பெரும்பான்மை மக்களுடைய மத நம்பிக்கைகளின் அடையாளத்தோடும் பள்ளிகள் இயங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறும். இந்த மனப்பான்மை மத சார்பின்மைக்கு இடையூறாக விளங்கும் என்பதோடு, குழந்தைகளின் மனதில் மத பிளவுகளை உருவாக்கும். சட்டம், மத சார்பின்மைக்கு குரல்கொடுப்பதாக இது நாள் வரை மார் தட்டி கொண்டிருந்தவர்கள், இந்த 'ஹிஜாப்' விவகாரத்தில் மத நம்பிக்கைகளை அனுமதிக்க வேண்டும் என்று சொல்வது அப்பட்டமான மதவாதமே. ஹிந்து அடையாளங்கள் இருக்க கூடாது என்று சொல்பவர்கள், போலி மதச்சார்பின்மையை கடைபிடிக்கும் கபடதாரிகளே. மதவாத சக்திகளை வேரறுப்போம்! நம் அடுத்த தலைமுறையை காப்போம்!” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!