
மழை பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.
சென்னையில் மழையால் பாதிப்பை சீரமைக்கக் கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2015 டிசம்பர் மாதம் ஏற்பட்ட பேரிடர் வெள்ளத்திலிருந்து அரசு இன்னும் பாடம் கற்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை எனவும் வெள்ளக்காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்க உத்தரவிடவும் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அரசு நிர்வாகத்தை உயர்நீதிமன்றமே ஏற்று நடத்த முடியாது என காட்டமாக கூறினார்.
மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாது என்றும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் உத்தரவிட்டார்.
வெள்ள பாதிப்புகளை தடுக்க குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை முறையாக வகுத்து செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். சென்னையில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி, மழை வெள்ள தடுப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மழை பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் இதுவரை அகற்றப்பட்ட விவரங்கள் குறித்தும் மழைநீர் கால்வாய் பராமரிப்பு குறித்தும் அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணையை அடுத்த வெள்ளிகிழமைக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.