
சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தரும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் வரும் சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆனால், இந்த பாடலில் வரும் “அதிகார திமிரை விரட்டி விரட்டி வெளுக்க தோணுது” என்ற வாக்கியம், அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளதால், அந்த வரியை நீக்க வேண்டும் எனக்கோரி அதிமுக நிர்வாகி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளுக்கு தமிழ் தெரியாது என்பதால், அந்த பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தருமாறு உத்தரவிட்டுள்ளனர்.