
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை அவற்றை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கே சென்று அவற்றின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சசிகலாவின் மிடாஸ் ஆலை உட்பட 17 மதுபான நிறுவனங்களிடமிருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களில் அதிகளவில் வேதிப்பொருட்கள் இருப்பதாகவும் மதுபானங்கள் தரமற்றதாக இருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில், தனிநபர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் மதுபான ஆலைகளுக்கு நேரில் சென்று அவற்றின் தரத்தை ஆய்வு செய்து வரும் டிசம்பர் 22-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. இதுதொடர்பாக டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை விநியோகிக்கும் 17 மதுபான ஆலைகள் பதிலளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.