கோவையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதலே தலைநகரான சென்னையில் தான் தொற்று அதிகரித்துக் காணப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே சென்னையை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு கோவை முதலிடம் வகித்து வருகிறது. கோவையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
undefined
கோவையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மற்றும் தேனியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களுக்கு முன்பு பதிவான அளவே நீடித்து வருகிறது. கோவையில் உள்ள ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்குச் சென்று பணியாற்றி வருபவர்கள் என்பதால் கொரோனா தொற்று அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் அதிக பாதிப்பிற்கு உள்ளாகி வருவதால் கோவை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி கோவைக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆய்வு நடத்தினார். மேலும் முதன்மைச் செயலாளர் சித்திக் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒரு குழுவை கோவைக்கு அனுப்பி ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த வகையில் கோவையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஒரிரு நாட்களில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட காலதாமதம் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர், எங்கும் 4 நாட்களில் கொரோனா முடிவுகளை அறிவிக்கும் நடைமுறை இல்லை என்றும், அனைத்து ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கூடங்களிலும் 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.