என் தம்பி டா...! சீமானுக்கு ஓங்கி குரல் கொடுத்த திருமாவளவன்.. கொக்கரிக்கும் நாம் தமிழர் தம்பிகள்.

By Ezhilarasan BabuFirst Published Dec 24, 2021, 2:33 PM IST
Highlights

நாம் தமிழர் கட்சிக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட்டணிக் கட்சியான திமுகவினர் மேடையில் ஏறி  தாக்குதல் நடத்தி இருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டித்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக திருமாவளவன் பேசியிருப்பதை நாம் தமிழர் கட்சியினர் நெகிழ்ச்சியுடன்  வரவேற்றுள்ளனர். 

நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் மேடையேறி தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அவர் தங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பது  நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகளுக்கும்- நாம் தமிழர்  கட்சிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும் நிலையில் திருமாவளவனின் அனுசரணையான இந்த கருத்து நாம் தமிழர் கட்சி தம்பிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

" நான் வளர்ந்ததே விடுதலை சிறுத்தைகள் மேடைகளில் தான்" "எங்களுக்கும் சிறுத்தைகளுக்கும் ஆயிரம் கருத்து மோதல்கள் இருந்தாலும் நாங்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் என்றும், எனது வழிகாட்டி அண்ணன் திருமாவளவன் தான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வந்தது உண்மையிலும் உண்மைதான் என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதுபோல தன்னைப்போலவே தமிழ் தேசியம் குறித்து பேசி வரும் சீமானுக்காகவும், நாம் தமிழர் கட்சிக்காகவும் திருமாவளவனின் குரல் இந்த இக்கட்டான நேர்தில் ஒலித்திருக்கிறது.

 "சாதி ஒழிப்பே சமூக விடுதலை" "ஆதித்தமிழர் விடுதலையே மீதித்தமிழர் விடுதலை " என விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் பேசி வருகிறது. இதே கொள்கை கோட்பாட்டுடன் திருமாவளவனின் அடியொற்றி சீமான் தமிழ் தேசியம் பேசி வருகிறார். இரண்டு கட்சிகளுமே பாசிசசத்தையும்,  பாஜகவையும் எதிர்ப்பதில் ஒரே புள்ளியில் நிற்கின்றன.

இரண்டு தலைவர்களும் பாசிச எதிர்ப்பு பாஜக எதிர்ப்பை கொள்கையாக வைத்து செயல்பட்டு வருகின்றனர். தமிழ்தேசிய களத்தில் ஒன்றுபட்டும் நிற்கும் காட்சிகள் அரசியல்  களத்தில் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றன. தமிழினத்தை தலை நிமிரச் செய்ததே திராவிடம் என திருமாவளவன் பேசும் அதே நேரத்தில்தான், தமிழினம் திராவிடத்தால் விழுந்தது என சீமான் முழங்கி வருகிறார். இவ்விரு கட்சிகளுக்கும் இடையேயான முரண் இதுதான். 

ஸ்டாலின் தான் தமிழகத்தில் நம்பிக்கை என திருமாவளவன் பேசினால்,  திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் சீமானும் அவரது தம்பிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த இடத்தில்தான் விடுதலை சிறுத்தைகளுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் சமூக வலைதளத்தில் மோதல் அதிகரித்துவருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசு சீமானை மிகக்கடுமையாக விமர்சித்து வருகிறார். "சீமான் ஆர்எஸ்எஸ் வைத்த அடியால்" என்றும் தமிழ் தேசியம் என்ற போர்வையில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை புகுத்த முயற்சிக்கிறார் சீமான் என்றும் விமர்சித்து வருகிறார்.

"பதிலுக்கு திராவிட கைக்கூலி திருமாவளவன்" என்றும் நாம் தமிழர் தம்பிகள் கூறிவருகின்றனர். சாதி ஒழிப்பு தமிழ் தேசியம் என ஒரே புள்ளியில் பயணித்தாலும் விடுதலை சிறுத்தைகளுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே கருத்து மோதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில்தான் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் மேடையேறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரியில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர்  என்பவர் பங்கேற்றார். 7 தமிழர் விடுதலை மற்றும் இஸ்லாமிய சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பாக ஒருங்கிணைக்கப்பட்ட அக்கூட்டத்தில் அவர் அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார். அப்போது பேச்சின் ஊடாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை அவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த திமுக நிர்வாகிகள் இதை பார்த்து கொதித்தனர். உடனே அவர்கள் நாம் தமிழர் கட்சியின் மேடையில் ஏறி மரியாதையாக பேசுங்கள் என எச்சரித்தனர். அப்போது மேடியிலிருந்து நாம் தமிழர் கட்சி தம்பிகள் அவர்களை தடுக்க பாய்ந்தனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே உணர்ச்சி மேலெழும்பி அது மோதமாக மாறியது. அப்போது மேடையிலிருந்த மைக்செட் உள்ளிட்டவற்றை திமுகவினர் கீழே தள்ளி இருக்கைகளை தூக்கி வீசி அதகளம் செய்தனர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். அப்போது அந்த இடத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திமுகவுக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியினர் மேடைகளில் ஆனாநகரீகமாக பேசுவதை தவிர்க்க வேண்டும், அப்படி பேசினால் இது போன்ற விளைவுகள் ஏற்படும் என்றும் பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன். நாம் தமிழர் கட்சியின்
மேடையில் ஏறி திமுகவினர் தாக்கிய  சம்பவம் தவறானது கண்டனத்துக்குரியது அதை திமுக தலைமை ஒருபோதும் அங்கீகரிக்காது அப்படி நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாம்தமிழர் அவதூறு பேசியதால் அதே பகுதியை சேர்ந்த திமுகவினர் தன்னியல்பாக மேடையேறி தகராறு செய்ததாக சமூகவலைதளங்களில் திமுகவினர் விளக்கம் கொடுத்துள்ளனர். இருந்தாலும்கூட கருத்துக்கு கருத்துதான் முன்வைக்கப்பட வேண்டும். வன்முறைகள் கூடாது, இந்த சம்பவத்திற்கு திமுக தலைமைக்கு உடன்பாடு இருக்காது என்று நம்புகிறேன். அப்படி நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்டமாக கூறினார்.

நாம் தமிழர் கட்சிக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட்டணிக் கட்சியான திமுகவினர் மேடையில் ஏறி  தாக்குதல் நடத்தி இருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டித்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக திருமாவளவன் பேசியிருப்பதை நாம் தமிழர் கட்சியினர் நெகிழ்ச்சியுடன்  வரவேற்றுள்ளனர். ஆயிரம் இருந்தாலும் அவர் எங்கள் அண்ணன்.. நான் அவரின் தம்பி என்று சீமான் மேடைதோறும் பேசி வந்தது உண்மைதான் என்று நாம் தமிழர் கட்சி தம்பிகள் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

click me!