வைகோ, திருமா, சு.வெங்கடேசன், ஜோதிமணியைப் பார்த்தீங்க.? முல்லை பெரியாறு விவகாரத்தில் அனல் கக்கும் அதிமுக.!

By Asianet TamilFirst Published Nov 9, 2021, 7:48 PM IST
Highlights

"எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதுதான் முல்லைப் பெரியாறு அணையில் 132 அடி என்றிருந்த நீர்த் தேக்க அளவை 136 அடியாக உயர்த்தினார். பின்னர் ஜெயலலிதா 142 அடியாக உயர்த்தினார். அதிமுக போராடிப் பெற்றுக் கொடுத்த தமிழக உரிமையை கேரளா அரசிடம் இன்று திமுக அரசு விட்டுக் கொடுத்துவிட்டது."
 

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்தனர். முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தப் பாடுபடுவேன் என்று கூறிய மதுரை எம்.பி.யைக் காணவில்லை. அவர் ஓர் அறிக்கை கூடக் கொடுக்கவில்லை என்று கேரளா அரசையும், தமிழக அரசையும் கண்டித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

முல்லைப்பெரியாறு பிரச்சனையில் அத்துமீறும் கேரள அரசு, துணை போகும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் மாநகர், மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் சார்பில் தனித்தனியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மதுரை மாநகர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார். “எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதுதான் முல்லைப் பெரியாறு அணையில் 132 அடி என்றிருந்த நீர்த் தேக்க அளவை 136 அடியாக உயர்த்தினார். பின்னர் ஜெயலலிதா 142 அடியாக உயர்த்தினார். அதிமுக போராடிப் பெற்றுக் கொடுத்த தமிழக உரிமையை கேரளா அரசிடம் இன்று திமுக அரசு விட்டுக் கொடுத்துவிட்டது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பாஜககூட குரல் கொடுக்கிறது. ஆனால், உரிமைகளுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் காணோம். அவர்கள் ஆளையே காணவில்லை. மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசன், நான் எம்.பி.யானவுடன்  முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த பாடுபடுவேன் என்றார். ஆனால், அவரை ஆளேயே காணவில்லை. கேரளா அரசின் தலையீட்டைக் கண்டித்து அறிக்கை கூட இல்லை” என்று செல்லூர் ராஜூ பேசினார். 

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், “முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீரை தேக்கி வைத்தாலும் அணை வலுவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். இன்னும் ஏழேழு தலைமுறைக்கும் அப்படியே இருக்கும். ஆனால், கேரளா அரசு 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க இடையூறு செய்கிறது.கேரளா அரசு தன்னிச்சையாக அக்டோபர் 29 அன்று 138 அடி தண்ணீர் இருந்தபோதே திறந்துவிட்டது. அதைத் தட்டிக் கேட்டாமல் தென் தமிழக விவசாயிகளைத் திமுக வஞ்சித்துவிட்டது. ஆனால், அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசுதான் தண்ணீரை திறந்தது என்று செய்த துரோகத்துக்கு நியாயம் கற்பிக்கிறார்” என்று உதயகுமார் பேசினார். 

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜன் செல்லப்பா பேசுகையில், “திமுக ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. நீட் தேர்வையும் காங்கிரஸ்-திமுகதான் கொண்டுவந்தது. தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் திமுக ஆட்சி கோட்டை விட்டது. இதுதொடர்பாக மதுரை எம்.பி. ஒரு அறிக்கைகூட விடவில்லை. ஏனென்றால் கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆள்கிறது. அதுமட்டுமல்ல, திருமாவளவன், ஜோதிமணி, வைகோ போன்றவர்கள் எல்லாம் தமிழக அரசு செய்தது தவறைக்கூட சுட்டிக் காட்டவில்லை” என்று ராஜன் செல்லப்பா பேசினார். 

click me!