கர்நாடகாவை பார்த்தீங்களா.? தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பு கொடுத்துடாதீங்க.. பிரசாரத்தில் கனிமொழி.!

By Asianet Tamil  |  First Published Feb 9, 2022, 9:07 PM IST

ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான் பாஜகவும் அதிமுகவும். தமிழ்நாட்டுக்கு அவமானத்தைத் தேடித் தந்தவர்கள் இவர்கள். கேடை விளைவிப்பவர்கள் என்பதைப் புரிந்து கொண்டு இந்தத் தேர்தலில் நீங்கள் எல்லோரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.


அதிமுகவும் பாஜகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கோவில்பட்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்தார். 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 அன்று நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் வேட்பு மனுத் தாக்கல், வேட்பாளர் இறுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 12,893 உள்ளாட்சிப் பதவிகளுக்காக சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியில் இறங்கியுள்ளனர். வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,  திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, அமமுக, மநீம உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சிகளின் முன்னணி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

 

இந்நிலையில் தூத்துக்குடி எம்.பி.யும். திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி கோவில்பட்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  கோவில்பட்டியில் 36 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி பிரசாரத்தில் பேசினார். “கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி விட்டோம். ஆனால், கோவில்பட்டியை மட்டும் கோட்டை விட்டுவிட்டோம். அதனால், ஒவ்வொரு நாளும் அந்தப் பாதிப்பை நாம் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஏனென்றால் இங்குள்ள எம்.எல்.ஏ. எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.

அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் கோவில்பட்டி மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றியதும் இல்லை. பிரச்சினைகளை தீர்த்ததும் இல்லை. மு.க. ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பாகவே மக்களை சந்தித்து என்னென்ன வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்தார்களோ, அந்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றி வருகிறார்கள். அதுதான் திமுக ஆட்சி. இப்போது மதத்தின் பெயரால் அடக்குமுறையின் பெயரால் கர்நாடகாவில் கலவரங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. எனவே, தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பளித்துவிடக் கூடாது.

ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான் பாஜகவும் அதிமுகவும். தமிழ்நாட்டுக்கு அவமானத்தைத் தேடித் தந்தவர்கள் இவர்கள். கேடை விளைவிப்பவர்கள் என்பதைப் புரிந்து கொண்டு இந்தத் தேர்தலில் நீங்கள் எல்லோரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். உங்களுக்கும் அரசாங்கத்துக்கும் பாலமாக இருக்கக்கூடிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என்று கனிமொழி தெரிவித்தார். கோவில்பட்டியைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டார். 
 

click me!