மகிழ்ச்சியான செய்தி மக்களே...!! சென்னையில் நோய் தொற்று குறைந்து, குணமடைவோரின் எண்ணிக்கை வேகமாக உயருகிறது..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 15, 2020, 4:36 PM IST
Highlights

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை சராசரியாக 1,200 என்ற நிலையில் குறைந்துள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சியின் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்படும் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என கண்டறிய இல்லங்களுக்கே சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள 12,000 களப்பணியாளர்கள் மற்றும் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்களை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடத்தி அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 8-5-2020 முதல் 14-7-2020 வரை 15 மண்டலங்களிலும் 17,134 காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள்  நடைபெற்றுள்ளன. முகாம்களில் 10,65,981 நபர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்துள்ளனர். இவர்களில் காய்ச்சல் இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளுடன் இருந்த 50,599 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 12,237 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 10 ஆயிரத்திற்கும் மேல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சென்னையில் வைரஸ் தொற்று நாள்தோறும் படிப்படியாக குறைந்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை சராசரியாக 1,200 என்ற நிலையில் குறைந்துள்ளது. மேலும் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, உதாரணமாக சென்னையில் 14-7-2020 அன்று மட்டும் 1,858 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அதே நாளில் 1,078 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதே போன்று பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், தனிமைப்படுத்தும் மையங்களை அமைத்தல்,  பல்வேறு விளம்பர பணிகளின் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை தமிழகத்தின் பிற பகுதிகளில் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேட்டுக்கொண்டார்.

 

click me!