மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு..தலைவர்களின் பேரக்குழந்தைகள் படிக்கும் விவரங்களை சேகரிப்போம். ஹெச்.ராஜா கட்டளை!!

By Asianet TamilFirst Published Aug 3, 2020, 8:54 PM IST
Highlights

மும்மொழிக் கல்வி கொள்கையைப் பின்பற்றும் பள்ளிகளில் படிக்கும் தலைவர்களின் பேரக் குழந்தைகள் விவரத்தைச் சேகரிப்போம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் புதிய கல்வி கொள்கையை தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துவருகின்றன. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கைகள் பின்பற்றப்பட்டுவரும் நிலையில், மும்மொழி பாடத்திட்டங்களுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இதேபோல தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்துவருகின்றன.
இதற்கிடையே தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்துவிட்டார். மேலும் புதிய தேசியக் கல்விக் கொள்கையைப் பற்றி ஆராய, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி கட்சியான அதிமுகவே மும்மொழி கொள்கை கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்மொழிக் கல்வி கொள்கையை எதிர்க்கும் தலைவர்களின் பேரக்குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் விவரத்தை சேகரிப்போம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நமக்கு எதிரான கொள்கை கொண்டவர்களாயினும் அதில் உறுதியாக இருந்தால் நாம் மதிக்கலாம். தங்கள் குழந்தைகளை மும்மொழிப் பள்ளிகளில் படிக்கச் செய்து கொண்டு நாங்கள் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம் என்பது ஏமாற்றுவேலை. இவர்கள் குழந்தைகள் பேரக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் விவரம் சேகரிப்போம்.” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

click me!