ஹெ.ராஜாவின் தம்பி சுந்தர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வரும்போது போட்டோ எடுக்க முயன்ற செய்தியாளரகளை அதிரடியாக தாக்க முயன்றார். மேலும் உங்கள் பெயர் என்ன என்று கேட்டதற்கு எடப்பாடி என எகத்தாலமாக பதிலளித்தார். கடந்த 2006 - 2011 வரை தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் 32.84 லட்சம் ரூபாயை, அப்போதைய அமைச்சர் கே.என்.நேரு, கும்பகோணம் கோட்ட மேலான் இயக்குநர் ராஜி, ராஜேந்திரன், வெங்கடாசலம், உள்ளிட்ட 19 பேர் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தஞ்சாவூரைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் கோவிந்தராஜன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இந்நிலையில், தன் புகார் மீதான விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக்கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கோவிந்தராஜன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கே.என்.நேரு உள்ளிட்ட 19 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின்போதே ராஜி என்பவர் இறந்துவிட்டார்.இதனிடையே அப்போது அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலத்தில் தலைமைக் கணக்கு அதிகாரியாக இருந்துவந்த ஹெ.ராஜாவின் தம்பி சுந்தர் மற்றும் சிவக்குமார், அண்ணாதுரை உள்ளிட்ட மேலும் 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுந்தர் ஓய்வுபெறும் நாளுக்கு முந்தைய நாளில், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று இந்த வழக்கில் ஹெச்.ராஜாவின் தம்பி சுந்தர் உள்ளிட்ட 21 பேர், நேரில் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொண்ட குற்றவாளிகள், வேறு வழியாக தனித்தனியே அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். அப்போது அவர்களைப் செய்தியாளர்கள் போட்டோ எடுக்க முயன்றனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஹெ.ராஜாவின் தம்பி சுந்தர், புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த செய்தியாளரை தாக்க முயன்றார். இதையடுத்து செய்தியாளர் உங்கள் பெயர் என்ன எனக் கேட்டபோது தன்னுடைய பெயர், எடப்பாடி என கூறி நடையை கட்டினார். இதனால் புகைப்படக்காரர்கள் நகர முயன்ற ஹெச்.ராஜாவின் தம்பியை இழுத்து பிடித்து போட்டோ எடுத்தனர்.