
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தில், குல்பூஷன் ஜாதவை அவருடைய தாயாரும் மனைவியும் நேற்று சந்தித்துப் பேசினார்கள். கண்ணாடி தடுப்புக்கு இடையே நின்றபடி அவர்கள் பேசினார்கள்.
மரண தண்டனைக்கு தடை
பாகிஸ்தானில் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி மரண தண்டனை விதிக்கப்பட்டவர் குல்பூஷன் ஜாதவ் (வயது 47). குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டது.
அதைத் தொடர்ந்து, அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை இந்தியாவில் உள்ள அவரது தாயாரும், மனைவியும் சந்திக்க விரும்பினர். இந்திய வெளியுறவுத்துறை இவ்விவகாரத்தை பாகிஸ்தான் அரசிடம் எடுத்து சென்றது.
பலத்த பாதுகாப்புடன்
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, குல்பூஷன் ஜாதவை அவரது தாயார் அவந்தி ஜாதவும், மனைவி சேட்டன் குல் ஜாதவும் சந்தித்துப் பேசுவதற்கு பாகிஸ்தான் கடந்த 20-ஆம் தேதி விசா அளித்தது. அதன்படி குல்பூஷண் ஜாதவை சந்தித்து பேச அவருடைய தாயார் மற்றும் மனைவி சென்றனர்.
அவர்கள் பாகிஸ்தான் சென்றதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அவர்கள் சென்ற வாகனத்திற்கு 7 வாகனங்களில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்து அழைத்து சென்றனர். பத்திரிகையாளர்கள் படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
சந்தித்துப் பேசினார்கள்
அவர்கள் முதலில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்களுடன் இந்தியாவிற்கான துணை தூதர் ஜெ.பி.சிங்கும் பாகிஸ்தான் பெண் அதிகாரி ஒருவரும் சென்று இருந்தனர். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பாதுகாப்புக்கு இடையே குல்பூஷன் ஜாதவை அவர்கள் சந்திதுப்பேசினார்கள்.
கண்ணாடி தடுப்பு
ஜாதவும் அவரது குடும்பத்தினரும் சந்தித்தபோது, இடையே கண்ணாடி தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. முகத்தை மட்டுமே அவர்களால் பார்க்க முடிந்தது.
போன் ஸ்பீக்கர் மூலம் அவர்கள் பேசிக்கொண்டனர். எவ்வளவு நேரம் அவர்கள் பேசினார்கள் என்ற விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முன்னதாக அவர்களுக்கு 1 மணி நேரம் அல்லது 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என்று மாறுபட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன.
‘மனித நேய அடிப்படையில் அனுமதி’-பாகிஸ்தான்
இந்த சந்திப்புக்குப்பின் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், ‘‘பாகிஸ்தானின் தந்தையான முகமது அலி ஜின்னாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு, மனித நேய அடிப்படையில் இந்த சந்திப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும்’’, ‘‘ஜாதவின் நடவடிக்கை குறித்து இந்தியா பதில் அளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும்’’ தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது-
‘‘இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் உளவாளியாக செயல்பட்டதை ஜாதவ் ஒப்புக்கொண்டு இருக்கிறார். மெஹரான் கடற்படை தளத்தில் நடைபெற்ற ‘பாகிஸ்தான் தலிபான் (டிடிபி) தீவிரவாத இயக்க தாக்குதலுக்கு அவர் ஆதரவாக இருந்தார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் காஜா முகமத் ஆசிப் அளித்த டி.வி. பேட்டியில், ‘‘இந்தியாவாக இருந்தால், இதுபோன்ற சந்திப்புக்கு நிச்சயம் அனுமதி வழங்கி இருக்காது’’ என்று கூறினார்.