19 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வருவாய் செப்டம்பரில் குறைந்தது … அதிர்ச்சியில் மத்திய அரசு !!

By Selvanayagam PFirst Published Oct 1, 2019, 8:52 PM IST
Highlights

பொருளாதாரம் மந்தமாகிவருவதை உணர்த்தும் வகையில் 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவைவரி(ஜிஎஸ்டி) வசூல் ரூ.91 ஆயிரத்து 916 கோடியாகக் குறைந்துள்ளது

செப்டம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட தொகைதான் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாகும். கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிடைத்த வருவாயோடு ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வருவாய் 2.67 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.94 ஆயிரத்து 442 கோடியாக இருந்தது.
கடந்த மாதத்திலும் ஜிஎஸ்டி வரிவருவாய் வசூல் ரூ.ஒரு லட்சம் கோடிக்கும் குறைந்தது, தொடர்ந்து 2-வது மாதமாக இந்த மாதமும் குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ 2019, செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் ரூ.91 ஆயிரத்து 916 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.16,630 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.25,598 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.45 ஆயிரத்து 069 கோடி, கூடுதல்வரி ரூ.7,602 கோடி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கு மாதத்தோறும் ரூ.ஒரு லட்சம் கோடிக்கு குறையாமல் ஜிஎஸ்டி வரிவருவாய் வருவது அவசியம், ஆனால் 2-வது முறையாக ஒரு லட்சம் கோடிக்கும் வருவாய் குறைந்துள்ளது.

இதற்கிடையே கடந்த மாதத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 25 சதவீதமாக மத்திய அரசு குறைத்து பல்வேறு சலுகைகளை அறிவித்து. இதன் மூலம் நடப்பு பட்ஜெட்டில் அரசுக்கு கிடைக்க வேண்டிய ரூ.1.45 லட்சம் கோடி இழப்பீடு ஏற்படும். இந்த சூழலில் ஜிஎஸ்டி வருவாயும் தொடர்ந்து குறைந்து வருவது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது

click me!