சசிகலாவை வரவேற்று பெருகும் போஸ்டர்கள்... குலசாமியாக்கி புகழாரம்..!

By Thiraviaraj RMFirst Published Feb 3, 2021, 1:53 PM IST
Highlights

சசிகலாவை வரவேற்று ஒட்டப்படும் போஸ்டர்கள் அதிகரித்து வருகின்றன. இது அதிமுகவினரிடையே எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

பெங்களூரு தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வரும் சசிகலா விரைவில் தமிழகம் வர உள்ள நிலையில், அவரை வரவேற்று பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினரே போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அமைச்சர்கள் சிலர் மேடைதோறும் முழங்கி வரும் அதேவேளையில், திருச்சியில், அதிமுக மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டிய சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது அந்த போஸ்டரில் "அதிமுக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

பிரச்னை முடிந்தது என நிம்மதிப் பெருமூச்சு விட்ட அமைச்சர்களுக்கு அடுத்த இடியை கொடுத்தார், திருச்சி அதிமுக மாவட்ட முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் அரசங்குடி ந.சாமிநாதன். அவர் ஒட்டிய போஸ்டரில் "அம்மா அவர்களோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா அவர்களே வருக வருக" என்ற வாசகங்கள் அதிமுகவினரை நிலைகுலையச் செய்தது.

அதிமுகவில் என்ன நடக்கிறது என்று நிதானிப்பதற்குள், தஞ்சாவூர் அதிமுக நகர துணை செயலாளர் சரவணன் சசிகலா விடுதலையை வரவேற்று நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டினார். அதேவேளையில், தொலைபேசியில் தன்னை தொடர்பு கொண்டு மிரட்டுவதாக ஒரு புகாரையும் தெரிவித்தார். அதற்குள்ளாக கோவை மாவட்டம் அன்னூரில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் போஸ்டர் ஒட்டினர். இப்படியே விட்டால் சரிவராது என நினைத்த அதிமுகவினர் அவற்றை கிழித்து எறிந்தனர்.

ஆனால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான, தேனி மாவட்டத்திலேயே பெரியகுளம் அம்மா பேரவை அவைத் தலைவர் வைகை சாந்தகுமார் சசிக்கலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டினார். அதிலும் "தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற தீயாக வரும் தியாகத் தலைவியே வருக, எங்கள் குலசாமியே வருக" என்பன போன்ற சசிகலாவின் புகழ்பாடும் அந்த வாசகங்கள் துணைமுதலமைச்சருக்குக் கூட எழுதப்படாதவை.

ஆண்டிப்பட்டியில் 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் போஸ்டர் ஒட்டி, தேனி மாவட்டத்தில் நானும் இருக்கிறேன் என தன்னை வெளிப்படுத்தினார் ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞரணி தலைவர் சின்ன ராஜா.இதனிடையே, திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், மனிதாபிமான அடிப்படையிலேயே சசிகலா நலம்பெற வேண்டுமென ட்விட்டரில் பதிவிட்டதாக தெரிவித்திருப்பது துணைமுதல்வருக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது.

விழுப்புரம் மட்டும் என்ன விதிவிலக்கா என கூறுவது போல் இருந்தது. அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கம்ருதீன் என்பவர் ஒட்டிய போஸ்டர்கள். இந்தநிலையில், சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டுபவர்கள் அதிமுகவினர் இல்லை என்று ஆவேசத்துடன் பேட்டியளித்தார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். சசிகலா ஒழிக என, தங்களாலும் லட்சக்கணக்கான போஸ்டர்கள் ஒட்ட முடியும் என்றும் கூறினார்.

ஆனாலும், சசிகலாவை வரவேற்று ஒட்டப்படும் போஸ்டர்கள் அதிகரித்து வருகின்றன. இது அதிமுகவினரிடையே எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

click me!