
காவிரி பாசன மாவட்டங்களையும், சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற மாவட்டங்களையும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் மலை போல் நம்பியிருந்த காவிரி நீர் இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கும் முழுமையாக கிடைக்காது என்பது படிப்படியாக உறுதியாகி வருகிறது. கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதால் காவிரி பாசன மாவட்டங்களில் 16லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கர்நாடக அணைகளின் நீர் இருப்பு 24 டி.எம்.சிக்கும் கீழ் குறைந்தால் உச்சநீதிமன்றமே ஆணையிட்டாலும் தமிழகத்திற்கு காவிரியில் ஒரு சொட்டு கூட தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூறியிருக்கிறார். கர்நாடக அணைகளில் 26 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் உள்ள நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, அதை கர்நாடகம் செயல்படுத்த மறுத்தால், மத்திய அரசு தலையிட்டு கர்நாடகத்திற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கினாலாவது தமிழகத்திற்கு ஏதேனும் நீதி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், மத்திய அரசோ, உள்ளூர் அரசியல் காரணங்களுக்காக, கர்நாடக அரசின் ஊதுகுழலாக செயல்படுவதால் தமிழகத்திற்கு நீர் கிடைக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு அமைத்துள்ள வல்லுனர் குழு அறிக்கையும் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியாது.
எனவே, காவிரி பாசன மாவட்டங்களையும், சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற மாவட்டங்களையும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும். உச்சவரம்பு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் பயிர்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
கடந்த 6 ஆண்டுகளாக குறுவைப் பயிர் சாகுபடி செய்ய முடியாததுடன், இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் வெற்றி பெற சாத்தியமில்லாததால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.