
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக சு. திருநாவுக்கரசர் பொறுப்பேற்று முதல் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. இன்று காலை 10 மணி அளவில் சத்யமூர்த்தி பவனில் நடைபெற்று வருகிறது.
கங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 61 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பல மாவட்ட தலைவர்கள் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்ட தலைவர்கள் தான். மீதமுள்ள 30 க்கும் மேற்பட்ட தலைவர்கள் பலதரப்பட்ட கோஷ்டியை சேர்ந்தவர்கள். தற்போதைக்கு திருநாவுக்கரசர் எந்த வித மாற்றத்தையும் செய்யவில்லை.
இந்த கூட்டத்தில் காவிரி பிரச்சனை, மற்ற பிரச்சனைகள் இருந்தாலும் உள்ளாட்சி தேர்தல் தான் முக்கிய அஜெண்டாவாக இருக்கும். உள்ளாட்சி தேர்தல் திமுக கூட்டணி காங்கிரசுக்கு குறைந்த இடங்களை ஓதுக்கீடு செய்தது காரணமாக பல மாவட்ட தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மாநில தலைவர் கூடுதல் இடம் தர வேண்டுமென திமுக வை வலியுறுத்திய போது ,அந்த அந்த மாவட்ட தலைவர்கள் எங்கள் மாவட்ட செயலாளர்களிடம் பேசி முடிவெடுத்து கொள்ளட்டும். கூடுதல் இடம் என்ற பேச்சுக்கே இல்லை என்று ஒதுக்கியது காங்கிரசில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ராகுலின் சென்னை விஜயம் அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் இரண்டாம் கட்ட தலைவர்கள் நம்புகின்றனர். அதனால் குறைந்த இடத்தை உள்ளாட்சி தேர்தலில் திமுகவிடம் வாங்கி கொண்டு அதிலும் தோற்றுப்போய் எதற்காக அவமானப்பட வேண்டும், அதைவிட தனித்து நிற்போம் திமுகவை கை கழுவுவோம் என்று பல தலைவர்கள் பேசியதாக் கூறப்படுகிறது.
சட்ட மன்ற தேர்தலில் நம்முடன் கூட்டு சேர்ந்ததால் பல இடங்களில் குறைந்த வாக்கு வித்யாசத்தால் திமுக வெல்ல முடிந்தது ஆனால் காங்கிரசுக்கு 41 இடங்கள் கொடுத்ததால் தான் திமுக தோற்றது என்று எப்படி கூறலாம் இது நம்ம்மை அவமானப்படுத்தும் செயல் என்று கொதித்து போயுள்ளனர்.
திமுகவில் அதன் தலைவர் கருணாநிதி மதித்தாலும் , பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தும் விதம் கூட்டணி தர்மமாக தெரியவில்லை என்பது மாவட்ட தலைவர்களின் எண்ணமாக உள்ளது. ஆகவே இந்த கூட்டம் காராசாரமாக இருக்கும் எனபதில் மாற்று கருத்தில்லை.
மறுபுறம் திமுகவும் இந்த கூட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ராகுலின் வருகைக்கு பிறகு ஏற்பட்ட மாற்றம் திருநாவுக்கரசர் திமுகவை மதிக்காமல் செல்லும் போக்கு ஆகியவற்றை வைத்து இந்த கூட்டம் செல்லும் போக்கை திமுக உன்னிப்பாக கவனிக்கிறது.