
தமிழக அரசு இந்த மாதமே கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வர இருப்பதாகவும், ஓ.பி.எஸ். இ.பி.எஸ் உட்பட 23 அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் நமது எம்ஜிஆர் நாளிதழில் வெளியாகி உள்ளது.
நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் இது தொடர்பாக தமிழக அரசு கலைப்பா...? என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி அரசு வருகிற 25 அல்லது 26 ஆம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வர இருப்பதாக தெரிகிறது.
ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., உட்பட 23 அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கசிகிறது.
அமைச்சர்களின் பினாமி சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஆளுநர் வசம் உள்ளது!!
இதேபோல 1976 ஆம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி திமுக ஆட்சியை இரவோடு இரவாக கலைப்பதற்கு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி நடவடிக்கை எடுத்தார்.
அப்போது ஆளுநரின் ஆலோசகர்களாக ஆர்.வி.சுப்பிரமணியம், பி.கே.தவே போன்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அதேபோல் தற்போதும் ஆளுநரின் ஆலோசகராக ஓ.ராஜகோபால் மற்றும் சோமநாதன் போன்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இதையறிந்த ஆளும் தரப்பினர்கள் ஆதாரங்களை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நெருக்கடியை எப்படி கையாள்வது என்று அதிர்ச்சியில் குழம்பிப் போயிருக்கிறார்கள். என்று நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையிலும் இது பதிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வர வாய்ப்புள்ளதாக கூறினார். மேலும், ஆளுநர் ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் நாஞ்சில் சம்பத் கருத்து
தெரிவித்திருந்தார்.