தமிழக அரசுக்கு 'டோஸ்' விட்ட.. ஆளுநர் ஆர்.என்.ரவி.. ஆளுநர் அதிரடி - பரபர பின்னணி..!!

By Raghupati RFirst Published Jan 26, 2022, 7:05 AM IST
Highlights

பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் தமிழ்நாடு உள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

73 வது குடியரசு தினத்தை ஒட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்த நன்னாளில், வீரமங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வ உ சிதம்பிரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், முத்துராமலிங்கத் தேவர், ஜானகி தேவர் உள்ளிட்ட பலரையும் எண்ணிப் பார்த்து, நம்முடைய நன்றி அறிதலை உரித்தாக்குவோன் என குறிப்பிட்டுள்ளார். 

நீட் தேர்வுக்கு முந்தைய காலத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்ததாக தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் காரணமாக, இத்தகைய எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 

எனினும், அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவேண்டியது நம்முடைய அவசரத் தேவை என ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். உயர்கல்வியிலும், ஒருகாலத்தில் நம்முடைய பல்கலைக்கழகங்களுக்கு இருந்த பெயரையும் பெருமையையும் மீண்டும் பெறுவதற்கு நாம் உழைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். 

உலகின் மிகத் தொன்மையான மொழி, தமிழ் என்றும்,  இலக்கிய, பண்பாட்டு, ஆன்மிகச் செறிவுமிக்க மொழி என்றும், பல்வேறு பாரதீய மொழிகளுக்குத் தமிழ்மொழி பெருமை கூட்டியுள்ளது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். நாட்டின் பிற பகுதிகளுக்குத் தமிழ்மொழி பரவுவதை ஊக்கப்படுத்தவேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.  அதே நேரத்தில், பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல், நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயிலவேண்டும் என ஆளுநர் ஆர்.என் ரவி வலியுறுத்தியுள்ளார். 

 பிற இந்திய மொழிகளின் அறிவை, நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது சரியல்ல என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.  மொழிரீதியான அறிவு மற்றும் பண்பாட்டு இடைச் சேர்க்கை, நம் அனைவரையுமே வளப்படுத்தும் என்றும், குடியரசுதின வாழ்த்து செய்தியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து கூறியுள்ளார். தமிழ்நாட்டின் சார்பில் அனைத்து கட்சி எம்பிகள் சமீபத்தில் தான் டெல்லி சென்று உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நீட் விலக்கு தொடர்பாக வலியுறுத்தினர். 

நீட் விலக்கு கோரி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருசேர மத்திய அரசை வலியுறுத்தி வரும் சூழலில், ஆளுநரின் இந்த கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்து இருக்கிறாரா ? ஆளுநர் என்ற கேள்வியும், முணுமுணுப்பும் அரசியல் வட்டாரங்களில் எழுந்து இருக்கிறது.

click me!