புதுச்சேரியில் பரபரப்பு...! அரசு விழா மேடையில் ஆளுநர் - அதிமுக எம்.எல்.ஏ. கடும் வாக்குவாதம்!

By vinoth kumarFirst Published Oct 2, 2018, 2:54 PM IST
Highlights

புதுச்சேரியில் நடந்த அரசு விழாவில், அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகனுக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே கடும் 
வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நடந்த அரசு விழாவில், அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகனுக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. புதுவை கம்பன் கலையரங்கத்தில், அரசு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் என பலர் கலந்து கொண்டனர். 

அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் மேடையில் பேசும்போது, புதுச்சேரி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார். கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அறிவிக்கும் முன்பு, பல்வேறு இடங்களில் கழிப்பிட வசதி இல்லை என்றார். அதற்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கையெடுத்து கும்பிட்டு, இருக்கையில் அமரும்படி கூறினார். இல்லை என்றால் விழா நடத்துவதற்கு உதவியாக, மேடையை விட்டு இறங்குங்கள் என்று கூறினார்.

  

இதனால் கடும் கோபமடைந்து எம்.எல்.ஏ.அன்பழகன் யூ கோ என்று ஆங்கிலத்தில், ஆளுநரைப் பார்த்து கூறினார். ஆனால், எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது மைக் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அன்பழகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேடையிலேயே துணை நிலை ஆளுநர் கிரண்பேடியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து எம்.எல்.ஏ. அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, என்னை அவமதிக்கும் செயலில் கிரண்பேடி ஈடுபட்டார்கள். 

அழைப்பிதழில், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என் பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் இது என் தொகுதி. என் தொகுதியில் செய்ய வேண்டிய நலப்பணிகளை செய்யவில்லை. அது குறித்து நான் மேடையில் பேசினேன். இரவில் குப்பை அள்ளபவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. 7-வது ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும் என்று பேசினேன். அப்போது துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, மைக்-ஐ ஆப் செய்கிறார். அவர் என்ன மைக் ஆப்ரேட்டரா? துணை நிலை ஆளுநரா? மக்கள் பிரதியான என்னை கிரண்பேடி அவமதித்தார். 

மைக் சுவிட்சை ஆப் செய்வதை, மேடையில் அமைச்சர்களும் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இது அநாகரீகத்தின் உச்சகட்டம் என்று அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கூறினார். அரசு விழா மேடையிலேயே, துணை நிலை ஆளுநருக்கும், அதிமுக எம்.எல்.ஏ.வுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!