
எடப்பாடி பழனிச்சாமியை பதவியேற்க அழைத்ததில், கவர்னர் சரியான முடிவு எடுத்தாரா, என்ன செய்து இருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வருகிறது. இதுபற்றி சிறு பார்வை.
தமிழக அரசியல் வரலாற்றில் 1988ம் ஆண்டு ஏற்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தை அடுத்து சரியாக 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதேபோன்ற நிலை தோன்றியுள்ளது.
அன்று எம்ஜிஆர் மறைவு, இன்று ஜெயலலிதா மறைவு. அன்றும் அதிமுக, இன்றும் அதே அதிமுக. அன்று பல நடவடிக்கைகளுக்கு சட்ட பாதுக்காப்பு இல்லை. ஆனால், இன்று உச்ச நீதிமன்றம் பல வழிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளது.
1991ம் ஆண்டு சாதாரணமாக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால், 1996ம் ஆண்டுக்கு பிறகு,கர்நாடகாவில் எஸ்.ஆர்.பொம்மையின் ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்றம் சரியான வழிகாட்டுதலை கொடுத்தது. அதன்பிறகு, கண்டபடி மாநில அரசுகளை கலைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதேபோன்று ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லை. ஒரே கட்சிக்குள் 2 பேர் உரிமை கோரும்போது, என்ன செய்வது போன்ற விஷயத்தில் கண்டபடி முடிவெடுக்காமல் என்ன செய்ய வேண்டும் என்று 1998ம் ஆண்டு கல்யாண் சிங் ஜெகதாம்பிகா பால் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு வழிகாட்டுதலை கொடுத்தது.
தமிழகத்தில் அதேபோன்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ள நிலையில், கவர்னருக்கு பெரிய அளவில் சட்ட சிக்கல் ஏற்பட்டது. கட்சி தன் கையில் இருக்கிறது என்பதற்காக, தனது கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி, ஒரு முடிவு எடுத்து பின்னர், அவர்கள் அனைவரையும் கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைத்து, வெளியே விடாமல், தங்களுக்கு சாதகமான ஒரு நிலையை சசிகலா தரப்பினர் முயற்சி எடுத்தனர். மறுபுறம், சில எம்எல்ஏக்கள் தப்பி சென்று, தங்களை அடைத்து வைத்ததாக புகாரும் அளித்தனர்.
இதற்கிடையில் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியதாக தெரிவித்து, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைத்து வைத்துள்ளதாக, தெரிவித்தார்.
இந்த நிலையில் கவர்னர் என்ன செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, தெளிவான ஒரு வழிகாட்டுதலை கொடுத்தார்.
1998ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் கொடுத்தபடி, இரு தரப்பிலும் யாரை முதல்வராக பதவியேற்க அழைப்பது என்பதற்கு, வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதாவது, 1998ம் ஆண்டில் கல்யாண்சிங் விவகாரத்தில் நடந்தது போல் என தெரிவித்தார். இதே கருத்தை மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரமும் தெரிவித்தார்.
கவர்னர் இப்படிப்பட்ட முடிவைதான் எடுப்பார் என எதிர் பார்த்த நிலையில், திடீரென நேரடியாக எடப்பாடி பழனிச்சாமியை பதவியேற்க அழைத்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சிலர் விபரம் தெரியாமல் இதை ஆதரித்தாலும், தனது தரப்பு எம்எல்ஏக்கள், மிரட்டி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை மறுக்கும் வித்த்தில், எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பு செயல்படவில்லை.
தன்னை முதலமைச்சராக பதவியேற்க அழைத்த பின்னரும், கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருப்பதும், பதவியேற்பு விழாவுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை அழைத்து வந்தார். இது, ஓ.பி.எஸ் தரப்பின் குற்றச்சாட்டை நிரூப்பிக்கும் வகையில் உள்ளது.
முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், 120க்கு மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என தெரிவிக்கும் எடப்பாடி பழனிச்சாமி, எதற்காக அவர்களை அடைத்து வைக்க வேண்டும் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படுகிறது.
கவர்னர் ஏன், திடீரென இப்படி ஒரு முடிவெடுத்தார். ஆட்சி அதிகாரம் கையில் இல்லாதபோது, எம்எல்ஏக்களை ஒரு இடத்தில் தங்க வைப்பதும், போலீசாரை மிரட்டுவதும், பத்திரிகையாளர்களை தாக்குவதும், பொதுமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், நேரடியாக அதிகாரத்துக்கு அழைக்கப்படும்போது, எப்படி நியாயமாக நடந்து கொள்வார்கள் என்ற கேள்வியை, பொதுமக்கள் நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.
கவர்னர் சரியான நிலைப்பாட்டை எடுத்தாரா இல்லையா? என்பதை இனி அடுத்தடுத்து வரப்போகும் நிகழ்வுகள் நிரூபிக்கும் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்தார்.