
குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற நீட் விலக்கு மசோதாவை உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரும் மசோதா கடந்த ஆண்டு செப்டம்பா் 13 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உள்ளதாகக் குறிப்பிட்டு ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த தமிழக அரசு, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியது. மேலும் இந்த நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், ஆளுநர் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தக் கூடாது எனவும் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதை அடுத்து ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. மேலும் மயிலாடுதுறை சென்ற ஆளுநருக்கு எதிர்க்கட்சிகள் கருப்புகொடி காட்டினார். இதனிடையே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி, ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்த மசோதா தொடர்பாக, குடியரசு தலைவரிடமும், மத்திய அரசிடமும் எம்.பி.,க்கள் குழுவினர் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் விலக்கு கேட்கும் மசோதாவை, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். இதனை ஆளுநரின் செயலர், தொலைபேசி மூலம் என்னிடம் தெரிவித்தார் என்று கூறினார். நீட் விலக்கு கேட்டு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததோடு மசோதாவும் அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் வைத்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்று கூறப்படுகிறது.