சுபஸ்ரீ மரணத்திற்கு அரசு பொறுப்பேற்க முடியாது.. அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு!!

By Asianet TamilFirst Published Sep 14, 2019, 5:44 PM IST
Highlights

அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து சுபஸ்ரீ என்கிற பெண் பலியான சம்பவத்திற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை அருகே சுபஸ்ரீ என்கிற பெண் நேற்று முன்தினம் மாலை தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சாலையின் நடுவே அதிமுக சார்பாக வைக்கப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை கடுமையாக எச்சரித்திருக்கிறது. இனி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க கூடாது என்று அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு அரசு எப்படி பொறுப்பேற்கும் எனக் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுபஸ்ரீ பலியானது எதிர்பாராத விபத்து என்றும் அதற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.இது தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

விதிகளை மீறி பேனர் வைத்ததே குற்றம். அப்படி இருக்கையில் அமைச்சர் இவ்வாறு பொறுப்பில்லாமல் பதிலளிக்கலாமா என்று சமூக ஊடகங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன. அதிலும் அதிமுக சார்பாக வைக்கப்பட்ட பேனர் விழுந்து தான் சுபஸ்ரீ பலியாகி இருக்கிறார். இந்த நிலையில் அமைச்சரின் இந்த பொறுப்பற்ற பதிலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டங்கள் எழுந்து வருகிறது.

click me!