தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை.. முதல்வருக்கு பாராட்டு.. இது நாம்தமிழர் கட்சியின் வெற்றி, மார்த்தட்டும் சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Jan 5, 2021, 12:38 PM IST
Highlights

இதே கோரிக்கையை, அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலும் தொடர்ச்சியாக முன்வைத்தேன். கடந்தாண்டு ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன். 

நாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு நன்றி என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: 

முப்பாட்டன் முருகனைப் போற்றிக் கொண்டாடும் திருநாளான தைப்பூசப் பெருவிழாவை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. ஐவகைத் திணை நிலங்களில் தலைநிலமான குறிஞ்சித்திணையின் தலைவனும், தமிழர் இறைவனுமாகிய, எம்மின மூதாதை முருகப்பெருந்தகையைப் போற்றித் தொழும் தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையை அறிவிக்க வேண்டும் எனக்கோரி நீண்ட நெடுங்காலமாக நாம் தமிழர் கட்சியும், அதன் பண்பாட்டுப்படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணியும் பரப்புரையும், போராட்டமும் செய்து வருகிறது. 

இதே கோரிக்கையை, அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலும் தொடர்ச்சியாக முன்வைத்தேன். கடந்தாண்டு ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன். இந்நிலையில், அதனை ஏற்று அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கேரள மாநிலத்திலுள்ள தமிழர் பகுதிகளான இடுக்கி, பீர்மேடு போன்றவற்றில் வாழும் தமிழர்களும் தைப்பூசத்தைக் கொண்டாடக்கூடிய வகையில் கேரள மாநிலத்திலும் அரசு விடுமுறை விடவேண்டுமென அம்மாநில முதல்வர் ஐயா பினராயி விஜயன் அவர்களையும், 

தமிழர்களின் இன்னொரு தாய்நிலமாக விளங்கக்கூடிய புதுச்சேரி மாநிலத்தில் தைப்பூசத்திருநாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் ஐயா நாராயணசாமி அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன். தமிழர்களின் பெருந்தெய்வமான முப்பாட்டன் முருகனைப் போற்றிக் கொண்டாடும் திருநாளான தைப்பூசத்தைப் பேரெழுச்சியோடு கொண்டாட வேண்டுமென உலகெங்கிலும் வாழும் தமிழர்களைப் பேரன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

click me!