மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இனி நிம்மதியா என்ஜாய் பண்ணுங்க... வழிகாட்டு நெறிமுறை இதோ.

By Ezhilarasan BabuFirst Published Oct 30, 2021, 6:22 PM IST
Highlights

மதுக்கூடங்களின் நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பே மதுக்கூடங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி முதல் மதுக்கூடங்கள் (டாஸ்மாக் பார்கள்) திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பார்கள் எப்போது திறக்கப்படும் என மதுப் பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த வாரம் வெளியிட்ட நிலையில், இந்த வழிகாட்டு நெறிமுறை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா அடங்கு காரணமாக திரையரங்குகள், பள்ளிக்கூடங்கள், மதுக்கூடங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது நோய்த்தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. எனவே அனைத்து விதமான அலுவலகங்கள், மற்றும் தொழில் நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா தொடர்பான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் பல தளர்வுகளுடன் கூடுதலாக தளர்வுகளை தமிழக அரசு  கடந்த 23 ஆம் தேதி அறிவித்தது. அதில் அனைத்து வகையான கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் ஆகியவை இரவு 11 மணி வரை செயல்பட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.அனைத்து வகையான உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகள்,  உள் விளையாட்டு அரங்கு பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல அனைத்து பள்ளிகளையும் திறந்து 1 முதல் 8 ஆம் வகுப்புவரையாலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளது. கூட்ட அரங்குகள், அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடையை தொடரும் என்றும், வழிகாட்டு நெறிமுறையில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் பண்டிகை மற்றும் சமுதாய நிகழ்வுகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும் மற்றும் பொது இடங்களில் கட்டாயமாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மதுபானக் கூடங்களை நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-  மதுக்கூடங்களின் நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பே மதுக்கூடங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,மதுக்கூடங்ளின் ஒப்பந்ததாரர்கள் வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் தொலைப்பேசி எண் கட்டாயம் சேகரித்து பதிவேட்டில் பராமரிக்க வேண்டும் என்றும், பணியாளர்கள் கூடுதல் கையுறைகள் பயன்படுத்துவதோடு, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, 6 அடி சமூக இடைவெளி பின்பற்றும் வகையில் கோடுகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மதுக்கூடங்களுக்கு உள் நுழையவும் வெளியேறவும் தனித்தனி வழியை பின்பற்ற வேண்டும். கூட்டம் கூடுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் முககவசம் கட்டாயம் அணிவதோடு, கொரோனா நோய் தொற்றின் அறிகுறி இல்லாத வாடிக்கையாளர்களை மட்டுமே மதுக்கூடங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், 55 வயதிற்கு கீழ் உள்ள பணியாளர்களை பணி அமர்த்தக்கூடாது எனவும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

tags
click me!