
நீட் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றாலும் எடுபடாது என்றும், இதுகுறித்த சட்டத்துறை செயலாளர் ஏற்கனவே எச்சரித்தும் முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்கவில்லை என்றும், டெல்லி மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் விமர்சித்துள்ளார். நீட் விவகாரத்தை திமுக அரசியலாக்கி வருவதை ஆளுநரின் நடவடிக்கை அம்பலப்படுத்திவிட்டது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.இன்னொரு முறை தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பிவைத்தாலும் அதில் அவர் காலம் தாழ்த்துவார் என்றும் ராஜகோபாலன் கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் எச்சரித்ததை போலவே ஆளுநருக்கும்- தமிழக முதல்வருக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது.
தமிழக ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டபோதே அவரின் நியமனத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காவல்துறை பின்புலம் கொண்ட ஒருவரை தமிழக ஆளுநராக நியமிப்பதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியதுடன், முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்வதற்கே ஆர்.என் ரவியை பாஜக நியமிக்கிறது என்றும் அக்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் இந்த விவகாரத்தில் எந்த எதிர்வினையும் ஆற்றாது தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்த்தாலும் ஆளுநர் என்பவர் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி நியமிக்கப்பட்டவர் என்பதால் தமிழக முதல்வரே நேரில் சென்று ஆளுநரை வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான உறவு சுமுகமாகவே ஆனால் ஆளுநர் விவகாரத்தில் ஆரம்பம் முதலிருந்தே பட்டும்படாமலும் இருந்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின், நீட் விவகாரத்தில் ஆளுநர் பாராமுகமாக இருந்து வருகிறார் என்பதையும், தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் உறுதியாகவே இருந்து வருகிறார் ஸ்டாலின். தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் காட்டமாக அறிக்கையின் வாயிலாக தனது நிலைபாட்டை உறுதி செய்து வந்தார் அவர். இந்நிலையில்தான் நீட் விலக்கு கோரி தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய சட்ட மசோதாவை நீண்ட காலதாமதத்திற்கு பிறகு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
இது தமிழக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட நவடிக்கை குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தப்பட்டு மீண்டும் ஓரு முறை தீர்மானம் நிறைவேற்றி அதை அளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் விவகாரத்தில் முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்பொது அது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து பலரும் பலவகையில் கருத்து கூறி வருகின்றனர். நீட் தேர்வை திமுக ரத்து செய்துவிடும் என ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்த நிலையில் அது பொய் வாக்குறுதி என்பதை ஆளுநரின் நடவடிக்கை காட்டிவிட்டது என கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:-
நீட் விலக்கு வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் கூட அது உச்ச நீதிமன்றத்திற்கு போனால் சட்டத்திற்கு விரோதமானது என்று அதை ரிஜக்ட் செய்துவிடுவார்கள் என்று தமிழக சட்டத்துறை செயலாளரே முதல்வருக்கு ஏற்கனவே ஆலோசனை சொல்லி இருக்கிறார். அதனால்தான் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூட இதை மேற்கோள் காட்டி பேசி இருக்கிறார். சி.வி சண்முகம் சட்ட அமைச்சராக இருந்த போது என்ன ஆலோசனையை பெற்றார்களோ அதே ஆலோசனைதானே திமுகவுக்கும் பொருந்தும். ஆனால் இதில் முழுக்க முழுக்க திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. நீட் மசோதவை வைத்துக்கொண்டு ஆளுநரை விமர்சிப்பது, சமூகநீதி என்று பேசுவது, பல மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதுவது போன்ற அனைத்தும் முழுக்க முழுக்க அரசியல்தான். அதனால்தான் திமுக கொடுத்த வாக்குறுதியே உண்மைக்குப் புறம்பானது என்பதை ஆளுநர் நிரூபித்துவிட்டார்.
அதனால்தான் ஆளுங்கட்சியினர் ஆளுநர் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். அதேபோல் தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினாலும் அதன் மீது அவர் விரைந்து பரிசீலனை செய்ய மாட்டார். ஐந்து மாதத்திற்கு மேலாக அவர் காலநீட்டிப்பு செய்வார். நீட் என்பது திமுகவுக்கு தான் பிரச்சனை. ஏனென்றால் அவர்கள்தான் தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் விலக்குவோம் என வாக்குறுதி கொடுத்தார்கள். தாங்கள் கொடுத்த வாக்குறுதி பொய்யாகி விட்டதே என்ற ஆதங்கத்தில் அவர்கள் இப்போது இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளும் நீட் ஏன் விளக்கப்படவில்லை என அன்றாடம் திமுகவை கேள்வி கேட்டு துளைக்கின்றனர். இந்த விவகாரத்தில் முழுக்கமுழுக்க ஆளுநர் அரசியல் செய்யவே இல்லை, அவர் சட்டப்படிதான் இதில் நடந்து கொண்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் மசோதாவை புறக்கணிக்க ஆளுநர் அனுப்பி இருக்கிற அந்த 6 பக்க கடிதத்தை திமுக பகிரங்கப்படுத்த வேண்டும். திமுக அதை மறைத்து வைத்திருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.