Goa poll 2022 : கருத்து கணிப்பு பொய்.. கோவாவில் 'காங்கிரஸ்' ஆட்சி அமைக்கும் !! முன்னாள் தேர்தல் ஆணையர்..

By Raghupati RFirst Published Jan 11, 2022, 9:19 AM IST
Highlights

கோவா மாநிலத்தை எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு அரசியல் சோதனைக் களமாக மாற்றி உள்ளன. சென்ற முறை நடந்த தேர்தலில் கூடுதல் எம்எல்ஏக்களை வென்ற காங்கிரஸ் கட்சியால் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை.

கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அங்கு தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே பிரசாரக் கூட்டங்களை கட்சிகள் பலவும் ஆரம்பித்து விட்டன. குறிப்பாக காங்கிரஸ் இந்த முறை தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரை கோவாவில் அதற்கு கடந்த 2017 தேர்தலுக்குப் பிறகு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  உண்மையில் காங்கிரஸ்தான் அதிக இடங்களில் வென்றது.தனது ராஜதந்திரத்தால் காங்கிரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கிவிட்டு, ஆட்சியில் அமர்ந்தது பாஜக.

தற்போது அப்படி நேர்ந்து விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் படு கவனமாக இருக்கிறது.  அக்கட்சியைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் கட்சியை விட்டு விலகி திரினமூல் காங்கிரஸில் சேர்ந்தும் கூட காங்கிரஸ் கட்சி கவலைப்படவில்லை. காரணம், மக்களின் மன நிலை இந்த முறை தனக்கு சாதகமாக இருப்பதாக காங்கிரஸ் திடமாக நம்புகிறது. 

பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பதும் காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கிறது.  இந்தநிலையில் கோவா மாநிலத்தின் அமைச்சர் மைக்கேல் லோபோ தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். மேலும் கட்சியிலிருந்தும் விலகியுள்ளார். 

அண்மையில் பாஜகவில் இருந்து இரண்டு கிறிஸ்துவ எம்.எல்.ஏக்கள் விலகிய நிலையில், மூன்றாவது கிறிஸ்துவ எம்.எல்.ஏ.வாக மைக்கேல் லோபோ கட்சியிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையுமா ? என்பது போக போகத்தான் தெரியும். 2017ல் இங்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் வென்றன. ஆனால் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் 3 எம்எல்ஏக்களையும், கோவா முற்போக்குக் கட்சியின் 3 எம்எல்ஏக்களையும் வளைத்து பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டது. 

இவர்கள் தவிர 2 சுயேச்சைகள், தேசியவாத காங்கிரஸின் ஒரு எம்எல்ஏவும் பாஜகவுக்கு ஆதரவு தர மனோகர் பாரிக்கர் முதல்வரானார். பாரிக்கர் 2019ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் சபாநாயகர் பிரமோத் சாவ்ந்த் புதிய முதல்வரானார். ஆனால் சாவந்த் அரசு மீது மக்களுக்கு நிறைய அதிருப்திகள் இருப்பதால் பாஜகவுக்கு சிக்கலாகியுள்ளது.

கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது. அதன்படி, கோவாவில் பாஜக 17-21 இடங்களை பிடிக்கும். அங்கு 40 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் 4-8 இடங்களை பிடிக்கும். ஆம் ஆத்மி 5-9 இடங்களை பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆம் ஆத்மி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளன என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது. 

கோவா தேர்தல் முடிவு குறித்து, முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் பிரபாகர் டிம்ப்ளோ கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சி அடுத்த ஆட்சியை அமைக்கும். பாஜக அரசுக்கு எதிரான அலை பலமாக வீசுகிறது. அது பாஜகவை தோல்விக்குள்ளாக்கும். பாஜக ஆட்சியை இழக்கும். காங்கிரஸ் பலம் பெறும். காங்கிரஸுக்கு 20 முதல் 22 சீட் வரை கிடைக்கலாம். இந்தத் தேர்தலில் திரினமூல் காங்கிரஸோ, ஆம் ஆத்மியோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை’ என்று கூறினார். இவரின் கருத்து உண்மையாகிறதா ? சிவோட்டரின் கருத்துக் கணிப்பு உண்மையாகிறதா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!