40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மக்கள் நலத் திட்டங்கள் தொடங்கி வைப்பதற்காக இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் பெரிய அளவில் டிரெண்டாகி முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மிகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது சென்னையில் ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக மோடி சென்னை வந்தார்.
அப்போது சென்னையில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போரட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுதான் மோடியின் வருகையை எதிர்த்து முதன்முறையாக #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.
அப்போதுதான் #GoBackModi என்ற ஹேஸ்டேக் பெரிய அளவில் வைரலானது. அப்போது முதல் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் #GoBackModi ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
இதையடுத்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு மோடி வந்தபோதும், அதைத் தொடர்ந்து அவர் திருப்பூர் வந்த போதும் #GoBackModi ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டங்கில் முதலிடம் பிடித்தது.
இதனிடையே தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். கன்னியாகுமரியில் நடக்க உள்ள அரசு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். இதற்காக குமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மோடி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் வைரலாகி வருகிறது. மோடியின் வருகைக்கு எதிராக தமிழர்கள் இதில் தொடர்ந்து டிவிட் செய்து வருகிறார்கள். இதனால் இந்த டேக் பெரிய அளவில் டிரெண்டாகி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
தொடர்ந்து நான்காவது முறையாக #GoBackModi ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.