
ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதையொட்டி கடந்த ஒரு வாரமாக தேர்தல் பறக்கும்படையினர், தீவிர சோதனை நடத்தி பல்வேறு பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர். ரூ.50 லட்சம் வரை கைப்பற்றியுள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ளதால், அதிமுக சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், வெளியூர்களில் இருந்து ஆட்களை இறக்கி, பல்வேறு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் கோடி கணக்கில் பணம் இருப்பதாக புகார் எழுந்தது.
இதைதொடர்ந்து, சென்னை நகரில் உள்ள அனைத்து பகுதியிலும் இன்று அதிகாலை முதல் விடுதிகள், ரிசார்ட்டுகள், லாட்ஜ்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி பல கோடி ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக சசிகலா அணியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட மூத்த நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை வீடு, புதுக்கோட்டையில் உள்ள வீடு, இலுப்பூரில் உள்ள கல்லூரி, கல் குவாரிகள் என 40க்கு மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.
மேலும், ஆர் கே நகர் தொகுதி வேட்பாளர்களுக்கு வினியோகம் செய்ய இருந்த 400 க்கு மேற்பட்ட டோக்கன்களும் சிக்கியுள்ளன.
இதேபோல் அவரது உறவினர் வீட்டில் இருந்து ஏராளமான பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கணக்கில் வராத பல கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.