
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமா னவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல கோடி ரூபாய் அளவிற்கு பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் தனியார் விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும், வரவு செலவு கணக்கு ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட 120 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பட்டுவாடா செய்ய திட்டமிடப்பட்டிருந்த தகவலும் அம்பலமாகியுள்ளதாக தெரிகிறது.
மேலும் மணல் மாபியா தலைவன் என்று அழைக்கப்படும் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியபோதே விஜய பாஸ்கருக்கும், சேகர்ரெட்டிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி பிரச்சனை தொடர்பான இந்த தகவலின் அடிப்படையில்தான் இன்று சென்னை, மதுரை, புதுக்கோட்டை,திருச்சி என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் புகுந்து விளையாடி வருகின்றனர்.
எம்எல்ஏ ஹாஸ்டலில் உள்ள அமைச்சர் விஜய பாஸ்கரின் அறை, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அறை உள்ளிட்ட 5 அறைகளில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மேயரும், திமுக எம்எல்ஏவுமான மா.சுப்ரமணியன், எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்துதான் ஆர்.கே.நகர் தொகுதிக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
மேலும் ஆளுங்கட்சியில் உள்ள மாநில அமைச்சர் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது வெட்கக்கேடான விஷயம். மேலும், சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள அவருக்கான அறையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது தமிழகத்துக்கு தலை குவை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.